'மணிப்பூர் நிலவரம் மோசமாகி வருகிறது' - கவர்னரை சந்தித்த பின் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு தகவல்

மணிப்பூருக்கு சென்றுள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு அம்மாநில கவர்னரை சந்தித்தனர்.

Update: 2023-07-30 07:43 GMT

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மணிப்பூர் வன்முறையில் இரு சமூகத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறியுள்ளன. அந்த வகையில் கடந்த மே 4ம் தேதி ஆண்கள் கும்பலால் குகி சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

மேலும், கள நிலவரம் குறித்து ஆராய 2 நாள் பயணமாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று மணிப்பூர் சென்றது.

இந்த குழுவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் (காங்கிரஸ்), சுஷ்மிதா தேவ் (திரிணாமுல் காங்கிரஸ்), கனிமொழி (திமுக), மனோஜ் குமார் ஜா (ராஷ்ட்ரீய ஜனதாதளம்), சந்தோஷ் குமார் (இந்திய கம்யூனிஸ்டு), ரகிம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி' (இந்தியா கூட்டணி) எம்.பி.க்கள் 21 பேர் இடம்பெற்றிருந்தனர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், வன்முறை நடைபெற்ற பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், மணிப்பூர் கவர்னர் அனுசியாவை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்தது. இந்த சந்திப்பின்போது மணிப்பூரில் அமைதியை கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்கும்படி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவர்னரிடம் வலியுறுத்தினர்.

கவர்னரை சந்தித்த பின் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மணிப்பூர் விவகாரம் குறித்து மாநில கவர்னரை சந்தித்து பேசினோம். அவரிடம் பேசியபோது கவர்னர் தனது வலி மற்றும் வேதனையை தெரிவித்தார். 2 நாட்கள் பயணத்தின்போது நாங்கள் நேரில் கண்ட காட்சிகள், நாங்கள் பெற்ற அனுபவங்களை அவரிடம் கூறினோம். நாம் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம் என கவர்னரும் ஆலோசனை வழங்கினார்.

மக்களிடம் உள்ள நம்பிக்கையின்மையை தீர்க்க அனைத்து சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தை நடத்த ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து அனைத்துக்கட்சி குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும் என்றும் கவர்னர் ஆலோசனை வழங்கினார்.

எங்களுக்கு விரைவில் வாய்ப்பு கிடைத்த உடன் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்கள் கூறிய பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்புவோம். இங்கு நாங்கள் நேரில் கண்ட சம்பவங்களில் மத்திய, மாநில அரசுகளின் குறைபாடுகள் குறித்தும் கேள்வி எழுப்புவோம்.

மணிப்பூர் விவகாரத்தில் நாங்கள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு விவாதத்திற்கு வர வேண்டுமென மத்திய அரசுக்கு நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். மணிப்பூரில் நிலைமை மோசமாகி வருகிறது. இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை அதிகரிக்கும்' என்றார்.    

Tags:    

மேலும் செய்திகள்