'பாக்ஸ்கான்' நிறுவனத்திற்கு தேவையான நிலம் ஒரு மாதத்தில் ஒதுக்கப்படும்; தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

ஐ-போன் தயாரிக்கும் 'பாக்ஸ்கான்' நிறுவனத்திற்கு தேவையான நிலம் ஒரு மாதத்தில் ஒதுக்கப்படும் என்று தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் கூறியுள்ளார்.

Update: 2023-06-01 20:28 GMT

பெங்களூரு:

வேலை வாய்ப்பு

தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீலை பெங்களூருவில் நேற்று 'பாக்ஸ்கான்' நிறுவன பிரதிநிதிகள் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, பெங்களூருவில் பாக்ஸ்கான் தொழிற்சாலை அமைப்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்புக்கு பிறகு மந்திரி எம்.பி.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாக்ஸ்கான் நிறுவனம் ஐ-போன் தயாரிக்கிறது. அந்த நிறுவனம் தேவனஹள்ளியின் தனது ஆலையை அமைத்து வருகிறது. அந்த நிறுவனத்திற்கு தேவையான நிலம் ஒரு மாதத்திற்குள் அதாவது வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதிக்குள் ஒதுக்கப்படும். அங்கு ரூ.13 ஆயிரத்து 600 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

தேவையான பயிற்சி

அந்த நிறுவனத்திற்கு வழங்க 300 ஏக்கர் அடையாளம் காணப்பட்டுள்ளது. வருகிற 2024-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் அந்த நிறுவனம் செல்போன் உற்பத்தியை தொடங்கும். அந்த நிறுவனத்திற்கு தினமும் 50 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இந்த நீர் வழங்குவதுடன் தரமான மின்சாரம், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

அந்த நிறுவனத்திற்கு தேவையான பயிற்சி விவரங்களை கேட்டுள்ளோம். அதற்கேற்ப தகுதியான இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். தைவானை சேர்ந்த இந்த நிறுவனத்தினர் 3 கட்டமாக நிறுவனத்தை அமைக்கிறார்கள். இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்த பிறகு ஆண்டுக்கு 2 கோடி செல்போன்கள் உற்பத்தி செய்யப்படும். அந்த நிலத்திற்கான மொத்த மதிப்பில் 30 சதவீதத்தை அதாவது 90 கோடியை அந்த நிறுவனம் கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியத்திற்கு வழங்கியுள்ளது.

இவ்வாறு எம்.பி.பட்டீல் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி பிரியங்க் கார்கே, தொழில்துறை முதன்மை செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்