டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Update: 2024-12-11 05:50 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லி சட்டமன்றத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க. 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் டெல்லி சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக களத்தில் நிற்கும் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க கடுமையாக உழைத்து வருகிறது.

இந்த சூழலில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணிக்கான இறுதிக்கட்ட ஒப்பந்தத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதன்படி காங்கிரசுக்கு 15 இடங்களும், மற்ற இந்தியக் கூட்டணி உறுப்பினர்களுக்கு 1-2 இடங்களும், மற்றவை ஆம் ஆத்மி கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லிசட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டியிடும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் , "டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தனது சொந்த பலத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைய வாய்ப்பில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக டெல்லி சீலாம்பூர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அப்துல் ரகுமான் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆம் ஆத்மியில் முஸ்லீம்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி அவர் கட்சியிலிருந்து விலகினார். இது ஆம் ஆத்மி கட்சிக்கு மற்றுமொரு அடியாகப் பார்க்கப்பட்டது. இந்நிலையில் தான் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று கெஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்