ராஜஸ்தான்: மாணவர்களுக்கு சிகரெட்டுகள் சப்ளை செய்த டெலிவரி நிறுவன ஊழியர் கைது
மாணவர்களுக்கு சிகரெட்டுகள் சப்ளை செய்த டெலிவரி நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.;
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், கோட்டா நகரில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு டெலிவரி நிறுவன ஊழியர்கள் மூலம் சிகரெட்டுகள் சப்ளை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட டெலிவரி நிறுவனத்திற்கு மாநகர போலீசார் கடிதம் எழுதியிருந்தனர்.
இருப்பினும் மாணவர்களுக்கு தொடர்ந்து சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்கினர். இதன்படி கோட்டா நகரில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில், மாணவர்களுக்கு சிகரெட்டுகள் சப்ளை செய்த சத்யபிரகாஷ் கோலி(48) என்ற டெலிவரி நிறுவன ஊழியரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.