'வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் பெண்களும் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம்' - ஒடிசா ஐகோர்ட்டு

வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் பெண்களும் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம் என ஒடிசா ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2024-07-05 12:24 GMT

புவனேஸ்வர்,

வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்ற பெண் ஒருவருக்கு அவர் பணியாற்றிய இடத்தில் மகப்பேறு விடுமுறை வழங்கப்படாததால், அந்த பெண் தனக்கு மகப்பேறு விடுமுறை வழங்க உத்தரவிடக்கோரி ஒடிசா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதி சஞ்சீப் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "ஒடிசா சேவைக் குறியீடு விதி 194-ன் கீழ், ஒரு பெண் ஊழியர் 180 நாட்கள் மகப்பேறு விடுமுறை பெற உரிமை உண்டு. ஒரு வயது வரையிலான குழந்தையை தத்தெடுக்கும் பெண் ஊழியர்களுக்கும் இத்தகைய சலுகை வழங்கப்படுகிறது. ஆனால், 'வாடகைத் தாய்' மூலம் தாய்மை அடையும் பெண்களுக்கு இதுபோன்ற சலுகைகள் இல்லை" என்று தெரிவித்தார்.

மேலும் ராஜஸ்தான் ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுகள் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதி, "வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு சமமான சிகிச்சை மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு குழந்தையின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு தாயின் பராமரிப்பு மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மனுதாரருக்கு 180 நாட்கள் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, வாடகைத் தாய் முறையில் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்குவதற்கான சலுகைகளை உருவாக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்