மழையில் விளையாடி கொண்டிருந்த 7-வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்
சிறுமி தனது குடும்பத்தினருடன் பகவதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.
திருச்சூர்,
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கருவந்தலா அருகே மாம்பரா பகுதியை சேர்ந்தவர் மகேஷ் கார்த்திகேயன். இவரது மகள் தேவிபத்ரா (வயது 7). இவள் வெங்கிடங்கு பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் மகேஷ் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் பகவதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார்.
அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதை பார்த்த தேவிபத்ரா, சகோதாரர் காசிநாதன் (9), அனுஸ்ரீ (8) ஆகியோர் மழையில் நனைந்தபடி விளையாடி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக கோவில் சுற்றுச்சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்தது. சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது, சிறுவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தவித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்கள் படுகாயம் அடைந்த தேவிபத்ரா, காசிநாதன், அனுஸ்ரீ ஆகிய 3 பேரை மீட்டு திருச்சூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி தேவிபத்ரா இறந்தாள். காசிநாதன், அனுஸ்ரீ ஆகிய 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த பாவரட்டி போலீசார் தேவிபத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.