'பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்க மாநில அரசு அனுமதி வழங்கவில்லை' - மணிப்பூர் காங்கிரஸ்

யாத்திரையை தொடங்க அனுமதி மறுப்பது மக்களின் உரிமையை மீறும் செயல் என மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது.

Update: 2024-01-10 09:21 GMT

இம்பால்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ யாத்திரை' (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். அவரது இந்த பாத யாத்திரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, கட்சிக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளித்தது.

இந்த யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான யாத்திரையை நடத்த ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை வருகிற 14-ம் தேதி ராகுல் காந்தி தொடங்க உள்ளார்.

இந்த யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்று பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும் என்றும் 110 மாவட்டங்களையும், சுமார் 100 மக்களவைத் தொகுதிகளையும், 337 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் ராகுல் காந்தியின் யாத்திரையை தொடங்குவதற்கு மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கேஷ்யாம் மேகசந்திரா செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

"நாங்கள் முதல்-மந்திரி பைரன் சிங்கை சந்தித்து, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஹட்டா காங்ஜெய்பங் பகுதியில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்குவதற்கு அனுமதி கோரினோம். ஆனால் அவர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். மாநில அரசின் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது மக்களின் உரிமையை மீறும் செயலாகும்."

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்