பெண் டாக்டர் பலாத்கார வழக்கு: டாக்டர்கள் வேலைக்கு திரும்ப முடிவு; ஆனால்...

பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் வேலைக்கு திரும்ப முடிவு செய்துள்ள டாக்டர்கள், புறநோயாளிகள் சேவை பிரிவுக்கான வேலையில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்து உள்ளனர்.;

Update:2024-09-19 23:48 IST

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த மாதம் 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரியும், பெண் டாக்டருக்கு நீதி வேண்டும் என கோரியும், சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரியின் முன்னாள் முதல்வரான சந்தீப் கோஷ் மற்றும் தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான அபிஜித் மொண்டல் ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. இதனால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. இந்த சூழலில், இளநிலை டாக்டர்களின் 40 நாள் போராட்டம் முடிவுக்கு வரவுள்ளது.

அவர்கள் வருகிற சனிக்கிழமை முதல் பணிக்கு திரும்புவது என முடிவு செய்துள்ளனர். ஆனால், புறநோயாளிகள் சேவை பிரிவுக்கான வேலையில் ஈடுபடமாட்டோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளையே மேற்கொள்வோம் என தெரிவித்தனர்.

பாதுகாப்பு விவகாரத்தில் மாநில அரசு உறுதி அளித்த பின்னரே, இந்த பணிகளுக்கு திரும்புவோம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். மேற்கு வங்காளத்தில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், சுகாதார சேவை பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. இதுதவிர, டாக்டர்களின் பெருமளவிலான கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளது. இந்த சூழலில் டாக்டர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்