சென்னை-மைசூரு இடையே தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை; பெங்களூருவில் வருகிற 11-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
தென்இந்தியாவின் முதல் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ந் தேதி பெங்களூருவில் தொடங்கி வைப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்
பிரதமர் மோடி வருகிற 11-ந் தேதி பெங்களூரு வருகிறார். அவர் அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் வருகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைக்கிறார். அதே விழாவில் கெம்பேகவுடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் திறந்து வைக்க இருக்கிறார். அதன் பிறகு பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
மேலும் அன்றைய தினம் பிரதமர் மோடி இந்தியாவின் 5-வது மற்றும் தென்இந்தியாவின் முதல் அதிவேகமாக செல்லும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
முக்கிய பிரமுகர்கள்
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வருகிற 1-ந் தேதி வழங்கப்படுகிறது. இந்த விழாவில் 3, 4 முக்கிய பிரமுகர்களை அழைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அவர்களின் வருகையை கன்னட வளர்ச்சித்துறை மந்திரி உறுதி செய்வார்.
பன்டே மட மடாதிபதி தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். விசாரணைக்கு பிறகு அனைத்து உண்மைகளும் வெளிவரும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.