சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு படையெடுப்பு

மந்திரி பதவிக்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் வீட்டுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். 8 மந்திரிகளுக்கு துறைகள் ஒதுக்குவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2023-05-21 20:38 GMT

பெங்களூரு:-

30 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று ஆட்சி அமைத்தது. முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார், 8 மந்திரிகள் மட்டுமே பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்-மந்திரியுடன் 28 மந்திரிகள் முதலில் பதவி ஏற்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் சாதி ரீதியாக அனைத்து சமூகங்களுக்கும் முன்னுரிமை கொடுப்பதுடன், சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளருக்கு சமமாக மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பதால் தான், காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவின் பேரில் 8 பேருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனால் மந்திரி பதவி கிடைக்காத மூத்த தலைவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக ஆர்.வி.தேஷ்பாண்டே, எச்.சி.மகாதேவப்பா உள்ளிட்டோருக்கு மந்திரி பதவி வழங்க டி.கே.சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அவர்களுக்கு பதிலாக இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும்படி கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

துறைகள் ஒதுக்காமல் நிறுத்தி...

இந்த நிலையில், மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் நேற்று பெங்களூருவில் உள்ள சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் வீடுகளுக்கு படையெடுத்து வந்தனர். அவர்கள் பதவி ஏற்றிருப்பதற்காக பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்து விட்டு தனக்கு மந்திரி பதவி வழங்கும்படி சித்தராமையா மற்றும்

டி.கே.சிவக்குமாரை வலியுறுத்தி உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் 23 பேருக்கு மட்டுமே மந்திரி பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் வருகிற 24-ந் தேதி சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் மீண்டும் வருகிற 24-ந் தேதி டெல்லிக்கு சென்று கட்சி மேலிட தலைவர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

2-வது கட்டமாக 20 பேருக்கு மந்திரி பதவி வழங்கவும், 3 மந்திரி பதவிகளை காலியாக வைத்து கொள்ளவும் காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் மந்திரிசபை விரிவாக்கம் நடந்த பிறகே, தற்போது பதவி ஏற்றுள்ள 8 பேருக்கும் துறைகள் ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதே 8 மந்திரிகளுக்கு துறைகள் ஒதுக்கி விட்டால், மற்ற எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மேலும் அதிருப்தி ஏற்படும் என்பதால், துறைகள் ஒதுக்காமல் நிறுத்தி வைத்திருக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் முடிவு எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்