மணிப்பூர் : கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்..!

மணிப்பூரின் பிஷ்ணுபூர் அருகே ராகுல் காந்தியின் வாகனம் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.

Update: 2023-06-29 08:02 GMT

இம்பால்,

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும். இதைதொடர்ந்து, இன்று மற்றும் நாளை மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று நேற்று கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார்.

இந்நிலையில், ராகுல் காந்தி இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூரில் உள்ள இம்பால் நகரத்திற்கு சென்றார் அங்கிருந்து சுராசந்த்பூருக்கு செல்லும் ராகுல் காந்தி நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார் தொடர்ந்து, நாளை இம்பாலில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.

இந்நிலையில், மணிப்பூரில் வன்முறை பாதித்த பகுதிக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மணிப்பூரின் சுராசந்த்பூர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்திப்பதற்காக சென்ற போது ராகுல் காந்தியின் கான்வாயை பஷ்ணுபூரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். வன்முறையின் மையப்பகுதியான சுராசந்த்பூருக்கு ராகுல் சென்று கொண்டிருந்தார். போலீசார் அவரை அங்கு செல்ல அனுமதிக்கவில்லை.

ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "பிஷ்ணுபூர் அருகே ராகுல் காந்தியின் கான்வாய் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. எங்களுக்கு அனுமதி இல்லை என போலீசார் கூறுகின்றனர். எங்களை ஏன் தடுத்தார்கள் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை?" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்