அயோத்தியில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம் - வாணவேடிக்கையை கண்டு ரசித்த பிரதமர் மோடி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற்ற தீப உற்சவ விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
லக்னோ,
தீபாவளி பண்டிகையை கொண்டாட பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தின் கோவில் நகரமான அயோத்திக்கு நேற்று மாலை சென்றடைந்தார். அயோத்திக்கு 2020-ம் ஆண்டு சென்றிருந்த பிரதமர் மோடி, அப்போது ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு நேற்று தான் அவர் அயோத்திக்கு சென்றுள்ளார்.
பிரதமர் வருகையையொட்டி சரயு நதிக்கரையில் அமைந்துள்ள கோவிலில் கண்கவர் லேசர் அலங்கார ஒளி அமைப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, ராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். அதனை தொடர்ந்து, அயோத்தியில் தீப உற்சவ விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்தம் அமைந்துள்ள இடத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இதனையடுத்து தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அயோத்தியில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகளை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கண்டு களித்தனர்.