பாஜகவின் மோசமான ஆட்சி நிர்வாகத்தால் கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் - டி.கே.சிவக்குமார்

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2023-04-19 23:11 GMT

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதாவின் மோசமான ஆட்சி நிர்வாகத்தால் வெறுப்பில் உள்ள கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மே 10-ந் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, மாற்றத்தை ஏற்படுத்த கூடிய நாள். ஊழலை விரட்டியடிக்கும் நாள். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் நாள், வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நாள், படித்த வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை கிடைக்கும் நாள் ஆகும்.

காங்கிரஸ் கட்சி 141 முதல் 150 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதல் மந்திரிசபை கூட்டத்திலேயே இந்த திட்டங்கள் குறித்து முடிவு எடுத்து அமல்படுத்துவோம். எங்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பட்டீலை இழுக்க பா.ஜனதா கடந்த 3 மாதங்களாக தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அவரிடம் நான் பேசியுள்ளேன்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதனால் பா.ஜனதா வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்தி காங்கிரசாரை மிரட்ட முயற்சி செய்கிறது. வருமான வரித்துறையினர் எவ்வளவு மிரட்டினாலும் நாங்கள் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றி நல்லாட்சி நிர்வாகத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்