நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 1,500 பழமையான சட்டங்கள் ரத்து செய்யப்படும் மத்திய சட்ட மந்திரி தகவல்
சட்டத்துக்கு கீழ்ப்படியும் சுமையை பொதுமக்களுக்கு குறைக்க பிரதமர் விரும்புகிறார்.
ஷில்லாங்,
மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பழமையான சட்டங்கள் முட்டுக்கட்டையாக உள்ளன. அவை தற்காலத்துக்கு பொருத்தமாகவும் இல்லை, சட்ட புத்தகத்தில் இருப்பதற்கு தகுதியும் இல்லை. சட்டத்துக்கு கீழ்ப்படியும் சுமையை பொதுமக்களுக்கு குறைக்க பிரதமர் விரும்புகிறார். அவர்கள் அமைதியாக வாழ்வதை உறுதி செய்ய விரும்புகிறார்.
அந்தவகையில், புழக்கத்தில் இல்லாத, பழமையான சட்டங்கள் அனைத்தையும் சட்ட புத்தகத்தில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏனென்றால், தேவையற்ற சட்டங்கள், சாமானியருக்கு சுமையாக உள்ளன. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 1,500-க்கு மேற்பட்ட பழமையான சட்டங்களை ரத்து செய்ய முடிவு ெசய்துள்ளோம். நான் அதற்கான மசோதாக்களை தாக்கல் செய்ய தயாராக இருக்கிறேன். வடகிழக்கு பிராந்தியம் மீது மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. வடகிழக்கை செழிப்பாகவும், நாட்டை வலிமையாகவும் மாற்றுவதே பா.ஜனதாவின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.