ஒடிசா: பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்த சிறுமிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!
நள்ளிரவு பள்ளிக்கு திரும்பி வந்த ஐந்து பேரும், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றனர்.
புவனேஷ்வர்,
ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர், தனது சகோதரருடன் தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில், அவர்கள் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கியதும், அப்பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது.
உடனே அங்கு நின்று கொண்டிருந்த சில 5-6 நபர்கள், அருகில் உள்ள பள்ளி கட்டிடத்தில் தங்கிவிட்டு, மழை நின்றவுடன் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம் என்று அவர்கள் இருவரிடமும் பரிந்துரைத்தனர்.
இரவு நேரம் என்பதால் இதை ஏற்றுக்கொண்டு அவர்கள் கூறியபடி பள்ளிக்கு சென்றனர்.
இருப்பினும், அன்று நள்ளிரவு பள்ளிக்கு திரும்பி வந்த ஐந்து பேரும், சிறுமியின் சகோதரரை அடித்து விரட்டியதாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர், அவர்கள் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றனர்.
இதை சற்றும் எதிர்பாராத சிறுமி, கயவர்களிடமிருந்து தப்பி ஓடி, பள்ளி கட்டிடத்தின் மாடிக்கு ஓடிச்சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.
இதற்கிடையே சிறுமியின் அண்ணனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிலர் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். பின் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் அந்த கிராமத்திற்கு சென்று அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அதனை தொடர்ந்து குற்றவாளிகள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.
ஆனால், பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து குதித்ததில் சிறுமி படுகாயமடைந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.