கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை: கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா தொற்று பல நாடுகளில் அதிகரித்துள்ளதை அடுத்து வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-21 10:54 GMT

புதுடெல்லி,

உலக அளவில் கொரோனா பாதிப்பு இன்னும் இருக்கிறது. ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளது. கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதி உள்ளார். இந்தநிலையில், பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் இன்று மதியம் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. டெல்லியில் நடந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகள், நிபுணர்களுடன் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். மந்திரி, அதிகாரிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா,

கொரோனா தொற்று பல நாடுகளில் அதிகரித்துள்ளதை அடுத்து வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அதேநேரத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்கான உத்தரவை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் பிறப்பித்துள்ளேன். எத்தகைய ஒரு சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்