உத்தரபிரதேசத்தில் எனது ஆட்சியின் கீழ் கடந்த 5 ஆண்டுகளாக எந்த வகுப்புவாத கலவரமும் இல்லை - யோகி ஆதித்யநாத்

உ.பி.யில் வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பாதுகாப்பை மீற அரசு அனுமதிக்காது.

Update: 2022-09-04 05:14 GMT

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கலவரங்கள் எதுவும் இல்லை என்றும் கலவரம் இல்லாத மாநிலமாக மாறியிருப்பதால், முதலீட்டாளர்களின் விருப்பமான இடமாக உ.பி உருவாகியிருப்பதாக அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

பிஜ்னோரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு ரூ.235 கோடி மதிப்பிலான 116 உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, "நமது மாநிலம் அதிகப்படியான முதலீடுகளை பெறத்தொடங்கியுள்ளது. வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன. 

உ.பி.யில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பாதுகாப்பை மீற அரசு அனுமதிக்காது. தற்போதைய ஆட்சியின் கீழ் எந்த வகுப்புவாத கலவரமும் நடைபெறவில்லை. மாநிலம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

கல்வி, சுகாதாரம், விவசாயம், வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பணிகளை அரசு முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.நெடுஞ்சாலைகளும் விரைவுச்சாலைகளும் உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசம் முற்றிலும் கலவரம் இல்லாத மாநிலமாகவும், குற்றம் இல்லாத மாநிலமாகவும் மாறிவிட்டது.

இதற்கு முன்பு போலீசாருக்கு வீடு வசதிகள் இல்லை. ஆனால், தற்போது போலீசாருக்கு அதி நவீன வசதிகளுடன் குடியிருப்பு வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இங்கு மகளிர் விடுதி கட்டும் பணி முடிந்துள்ளது. காவல்துறையினருக்கும் சிறந்த குடியிருப்பு வசதிகள் இருப்பதை உறுதிசெய்கிறோம்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்