உ.பி. ஷாப்பிங் மாலில் தொழுகை நடத்திய விவகாரம்; மேலும் இருவர் கைது!

லக்னோவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஒரு ஷாப்பிங் மாலில் சில நபர்கள் தொழுகை நடத்தும் வீடியோ வெளியானது.

Update: 2022-07-24 13:14 GMT

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஒரு ஷாப்பிங் மாலில் கடந்த ஜூலை 13ஆம் தேதி சில நபர்கள் ஷாப்பிங் வளாகத்தில் தொழுகை நடத்தும் வீடியோ வெளியானது.

இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து அனுமான் சாலிசா பாடுவதற்கு அனுமதி கோரினர். மேலும் ஜூலை ௧௪ அன்று அவர்கள் வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஷாப்பிங் வளாகம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.

இதனை அடுத்து இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்த ஷாப்பிங் மால் நிர்வாகம், தங்கள் வளாகத்தில் பணிபுரிபவர்களின் 80 சதவீதத்திற்கும் மேல் இந்துக்களே என்றது. எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் கூறியது.

இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது, "லக்னோ நிர்வாகம் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற தொல்லைகளை உருவாக்க முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் ஷாப்பிங் மாலில் தொழுகையை நடத்திய விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் அனுமதி இன்றி வளாகத்தில் வழிபாடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களை தேடும் பணி நடைபெறுகிறது. கைதானவர்கள் யாரும் அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, லுலு மாலில் அனுமன் சாலிசாவை பாடியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். லுலு நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஜூலை 12 அன்று வணிக வளாகத்தில் தொழுகை நடத்திய எட்டு முஸ்லிம் ஆண்களில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது மத உணர்வுகளை சீர்குலைத்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.பொது இடத்தை மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதால் மத நல்லிணக்கத்தை மீறுவதாக சில இந்து அமைப்புகள் அவர்கள் மீது குற்றம் சாட்டின.

பின்னர், தொழுகை நடத்திய முஸ்லிம் நபர்களுக்கு பதிலடியாக, ஜூலை 15 அன்று பிரார்த்தனை நடத்த முயன்ற மூன்று இந்து மத ஆண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் முஸ்லீம் நபர் ஒருவரும், தொழுகை நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டார். அதற்கு அடுத்த நாள், 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடர் சர்ச்சையை அடுத்து, 'லுலு வளாகத்தில் மத வழிபாடுகளுக்கு அனுமதி கிடையாது' என நிர்வாகம் பலகை வைத்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்