போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த காதல் மனைவிக்கு கத்திக்குத்து

மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நிலையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-24 21:47 GMT

பெங்களூரு:

மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நிலையில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் காதல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

மது குடிக்கும் பழக்கம்

பெங்களூரு பானசவாடி பகுதியை சேர்ந்தவர் திவாகர்(வயது 30). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும் நிகிதா (28) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் 2 பேரும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் பானசவாடியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் தினமும் திவாகர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

மனைவிக்கு கத்திக்குத்து

ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த நிகிதா தனது கணவரை அந்த பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார். அங்கு திவாகரை சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்த பின்னர் திவாகர், தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது அவர் அந்த பகுதியில் சாலையின் ஓரத்தில் தனது ஸ்கூட்டரை நிறுத்தினார். இதற்கிடையே திவாகரின் நண்பர்கள் அங்கு வந்தனர். அந்த சமயத்தில் திடீரென திவாகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது மனைவியின் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் சரமாரியாக குத்தினார்.

கைது

இதில் நிகிதா ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதையடுத்து திவாகர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதைக்கண்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் உடனடியாக நிகிதாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பானசவாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மேலும் அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்த ஆத்திரத்தில் தனது மனைவியை, நண்பர்கள் உதவியுடன் திவாகர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றது தெரிந்தது.

இதையடுத்து தப்பியோடிய திவாகரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்