லக்னோ: ஆற்றில் கார் விழுந்து விபத்து - இருவர் மீட்பு, இருவர் மாயம்

லக்னோவில் ஆற்றில் கார் விழுந்த விபத்தில், காரில் இருந்த நான்கு பேரில் இருவர் மீட்கப்பட்டனர். இருவரை காணவில்லை.

Update: 2022-12-21 01:07 GMT

லக்னோ,

நேற்று இரவு லக்னோவில் கோமதி ஆற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த நான்கு பேரில் இருவர் மீட்கப்பட்டனர். இருவரை காணவில்லை. இந்த சம்பவம் மகாநகர் காவல் நிலையம் அருகே, பைகுந்த் தாம் ஆற்றங்கரைக்கு எதிரே நடந்தது. விகாஸ் நகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், சாலையிலிருந்து விலகி ஆற்றில் விழுந்தது.

விபத்து குறித்து அறிந்த போலீசார், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை பணியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய காரை மீட்பு குழுவினர் ஆற்றில் இருந்து மீட்டனர். காரில் இருந்த நான்கு பேரில், இருவர் மீட்கப்பட்டதாகவும் மற்ற இருவரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட இருவர் துஷ்யந்த், அபிஷேக் என்றும், காணாமல் போன இருவர் ராகுல் மற்றும் மினா என்றும் லக்னோ மாவட்ட மாஜிஸ்திரேட் சூர்யபால் கங்வார் தெரிவித்தார். நான்கு பேரும் கோமதி நகரில் அழகு நிலையம் நடத்தி வருகின்றனர். நான்கு பேரைத் தவிர, செல்லப்பிராணி நாய் ஒன்று காரில் இருந்ததாகவும், அது விபத்தில் இறந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு உத்தரவிட்டார். மேலும், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்