பா.ஜனதா ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை - டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு

பா.ஜனதா ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை என்று டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டினார்.

Update: 2022-08-22 20:00 GMT

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குடகில் சித்தராமையா மீது பா.ஜனதாவினர் தாக்குதல் நடத்தினர். அங்கு போராட்டம் நடத்தியவர்களுக்கு அரசே உதவி செய்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், காங்கிரசாரும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். அவ்வாறு காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் மந்திரிகள் வெளியில் நடமாட முடியுமா?. மக்களின் வாழ்க்கை குறித்து அரசு கவனிக்க வேண்டும். இந்த அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.

வருகிற 26-ந் தேதி காங்கிரஸ் குடகில் போராட்டம் நடத்துகிறது. அவமானம் நடந்த இடத்திலேயே போராட்டம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்வோம். மக்கள் நிம்மதியாக வாழ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டை வீசுவதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. முட்டை வீச்சை கண்டித்து காங்கிரசார் சில இடங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் பா.ஜனதாவினர் மீது வழக்கு போடவில்லை.

கர்நாடகத்தில் அமைதி-அரசியல் சாசனத்தை பாதுகாக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கவில்லை. லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அந்தஸ்து வழங்க முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சித்தராமையா தற்போது மடாதிபதியிடம் கூறிய கருத்துகள் பற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்