நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த காலக்கெடு நிர்ணயமா? மக்களவையில் கேள்வி

பா.ஜனதா ஆட்சியில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது.

Update: 2023-03-24 21:45 GMT

புதுடெல்லி, 

பா.ஜனதா ஆட்சியில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இது தொடர்பான கேள்விகள் நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்டன. சிவசேனா உறுப்பினர்கள் கஜானன் சந்திரகாந்த் கீர்த்திகர், கலாபன் மோகன்பாய் டெல்கர் ஆகியோர், 'நாட்டில் ஜனநாயக முறையை ஏற்றுக்கொண்ட பிறகு மாநில சட்டசபைகள் மற்றும் மக்களவைத் தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்பட்டதா? அப்படியென்றால் எத்தனை முறை ஒன்றாக நடத்தப்பட்டுள்ளன? மீண்டும் அப்படி ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஏதேனும் காலக்கெடு முன்மொழியப்பட்டுள்ளதா? என்று கேட்டிருந்தனர்.

அதற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

நாடாளுமன்ற மக்களவைக்கும், அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் 1951-1952, 1957, 1962 மற்றும் 1967-ம் ஆண்டு என 4 முறை ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் 1968 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் சில மாநில சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் அந்த சுழற்சி தடைபட்டது. தற்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கு முன்மொழிவுகள் எதுவும் இல்லை.

இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்