காதல் திருமணத்தை பதிவு செய்வதற்கு பெற்றோர்களின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும் - குஜராத் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை

காதல் திருமணத்தை பதிவு செய்வதற்கு பெற்றோரின் கையொப்பத்தை கட்டாயமாக்க வேண்டும் என குஜராத் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர்.

Update: 2023-03-17 15:22 GMT

சூரத்,

குஜராத் சட்டசபையில் சட்டத் துறை மீதான விவாதத்தின் போது, காதல் திருமணத்தை பதிவு செய்வதற்கு பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைத்தனர்.

சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏ பேசியதாவது:-

பெற்றோரின் அனுமதியின்றி நடக்கும் திருமணங்களால் மாநிலத்தில் குற்ற விகிதம் அதிகரிக்கின்றன. பெற்றோர் சம்மதத்துடன் பதிவு செய்தால், குற்ற விகிதம் 50% குறையும். கோர்ட் திருமணங்கள் அந்தந்த பகுதியில் பதிவு செய்யப்படுவதில்லை என தெரிவித்தார்.

ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் ஆவணங்களை மறைத்து மற்ற மாவட்டங்களில் திருமணம் செய்து, பின்னர் பெண் பாதிக்கப்படுகிறார்கள் அல்லது பெற்றோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் தற்போதுள்ள சட்டங்களைத் திருத்தி, நீதிமன்றத் திருமணங்களுக்குப் பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார். மேலும் சமூக விரோதிகளால் சிறுமிகள் ஈர்க்கப்பட்டு கடத்தப்பட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் அவர்களை காப்பாற்ற, அத்தகைய திருத்தம் அவசியம் என்று அவர் கூறினார்.

அதைபோல திருமணங்களில் பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்கும் சட்டத் திருத்தத்தை அரசு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை வாவ் காங்கிரஸ் எம்எல்ஏ ஜெனி தாக்கூர் எழுப்பினார். அதேபோல், மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் இதே கோரிக்கைகளை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்