உத்தரகாண்ட் விடுதியில் சட்டவிரோத சூதாட்டம்; 5 நடன அழகிகள் உள்பட 31 பேர் கைது

உத்தரகாண்டில் உள்ள விடுதியில் சட்டவிரோத சூதாட்டம் நடந்த விவகாரத்தில் 5 நடன அழகிகள் உள்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-23 07:24 GMT

ரிஷிகேஷ்,

உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் கங்கா போக்பூர் பகுதியில் நீரஜ் பாரஸ்ட் என்ற பெயரில் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், சட்டவிரோத சூதாட்டம் நடைபெறுகிறது என போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து, கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு ஜெயபாலுனி தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை ஒன்று உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது.

அந்த விடுதியை சுற்றி கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவு முழுவதும் விடுதியில் சோதனை நடந்தது. இதனால், விடுதி ஊழியர்களிடையே பதற்றம் காணப்பட்டது. விடுதியில் இருந்து சீட்டு கட்டுகள், சூதாட்டத்திற்கான சிப்புகள், பணம் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

இதுபற்றி எஸ்.பி. கூறும்போது, விடுதியின் பின்புறம் அமைந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் இந்த சட்டவிரோத சூதாட்டம் நடந்து வந்துள்ளது. இந்த சோதனையில், 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை நடத்தி வந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுதவிர, 5 பெண்களும் காணப்பட்டனர். அவர்கள் சூதாட்ட விடுதியில் நடனம் ஆடுவதற்காக அழைத்து வரப்பட்டவர்கள் என கூறினார்கள்.

இதனை தொடர்ந்து விடுதியின் அடித்தளத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சம்பவ பகுதியில் இருந்து 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்