பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசிய வழக்கில் குஜராத் ஆம் ஆத்மி தலைவர் இன்று டெல்லியில் கைது!
கோபால் இத்தாலியாவுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து, அங்கு நேரில் ஆஜராகி இன்று விளக்கமளித்தார்.
புதுடெல்லி,
குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், அவர் பிரதமர் நரேந்திர மோடி மீது தரக்குறைவான கருத்துக்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோபால் இத்தாலியாவுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து, அங்கு நேரில் ஆஜராகி இன்று விளக்கமளித்தார் இத்தாலியா. இந்நிலையில், மகளிர் ஆணைய அலுவலகத்திற்கு வெளியே ஆம் ஆத்மி தொண்டர்கள் கூடியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா, தனது அலுவலகத்திற்கு வெளியே நடந்த சலசலப்பு குறித்து டுவீட் செய்துள்ளார்.
இது குறித்து யுவிட்டரில் பதிவிட்ட ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா கூறியதாவது:-
"என்னை சிறையில் அடைத்துவிடுவேன் என்று தேசிய மகளிர் ஆணைய தலைவர் மிரட்டுகிறார். மோடி அரசால் படேல் சமூகத்திற்கு சிறையை தவிர வேறு என்ன கொடுக்க முடியும். பா.ஜ.க படேல் சமுதாயத்தை வெறுக்கிறது" என்று பதிவிட்டார்.
இதனை தொடர்ந்து, கோபால் இத்தாலியா டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இத்தாலியாவை டெல்லி போலீசார் சரிதா விஹார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி, குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா கைது செய்யப்பட்டுள்ளார்.