இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: நாட்டுக்கு பிரதமர் மோடியின் பரிசு - ஜே.பி.நட்டா

பூஸ்டர் டோஸ் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2022-07-13 16:09 GMT

புதுடெல்லி,

நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பெரிதும் உதவி வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி ஜூலை 15-ம் தேதி முதல் செப். 28-ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருப்பது, பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு வழங்கிய பல பரிசுகளில் ஒன்றாகும் என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், " ஜூலை 15, 2022 முதல் அடுத்த 75 நாட்களுக்கு, 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ்கள் இலவசமாக வழங்கப்படும். நமது நாட்டின் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில் நமது மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் நாட்டுக்கு வழங்கிய பல பரிசுகளில் இதுவும் ஒன்றாகும், மேலும் ஒவ்வொரு குடிமகன் மீதும் அவர் கொண்டிருந்த அக்கறைக்கு சான்றாகும். " இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்