கர்நாடகத்தில் பெண் தர மறுத்த விவசாயிக்கு நேர்ந்த சோகம்... பயிர்களை வெட்டி வீசிய இளைஞர்
அசோக்கிற்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க விவசாயி வெங்கடேஷ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள ஹன்சூரு பகுதியில், வெங்கடேஷ் என்ற விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தில் பாக்குச் செடிகளை பயிரிட்டிருந்தார். இந்த பயிர்களை இரவோடு இரவாக சில மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த அசோக் என்பவர் பயிர்களை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக விவசாயி வெங்கடேஷின் மகளுக்கும், அசோக்கிற்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்ததாகவும், ஆனால் அசோக்கிற்கு சில தவறான பழக்க வழக்கங்கள் இருந்ததால், அவருக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க வெங்கடேஷ் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரத்திரமடைந்த அசோக், விவசாயி வெங்கடேஷை பழிவாங்க அவரது விவசாய நிலத்தில் இருந்த பாக்குச் செடிகளை வெட்டி வீசியுள்ளார். இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, வெங்கடேஷின் தோட்டத்தில் இருந்த இஞ்சி செடிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதையும் அசோக் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், தற்போது தலைமறைவாக இருக்கும் அசோக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.