அஜ்ஜாம்புராவில் பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை

அஜ்ஜாம்புராவில் பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-01 18:45 GMT

சிக்கமகளூரு-

அஜ்ஜாம்புராவில் பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

பருவமழை பெய்யவில்லை

கர்நாடகத்தில் இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதே நிலை தான் சிக்கமகளூரு மாவட்டத்திலும் நீடிக்கிறது. இந்தநிலையில் வறட்சி காரணமாக பயிர்கள் கருகியதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடூர் தாலுகா கிரியாபுராவை சேர்ந்த விவசாயி சதீஷ் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் அஜ்ஜாம்புரா தாலுகாவில் நேற்று விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:- சிக்கநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமேஷப்பா (வயது 52). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில் பரமேஷப்பா வெங்காயம் பயிரிட்டு இருந்தார். இதற்காக வங்கியில் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

இந்தநிலையில், போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகின. இதனால் வங்கியில் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியவில்லை. இதன்காரணமாக பரமேஷப்பா மனமுடைந்து காணப்பட்டார். மேலும் அவர் கடந்த சில நாட்களாக உறவினர்களிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பரமேஷப்பா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அஜ்ஜாம்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பரமேஷப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அஜ்ஜாம்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்