மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கும் ஐரோப்பிய யூனியன், பிரதமர் ஒருவார்த்தை கூட பேசவில்லை: ராகுல் காந்தி தாக்கு
மணிப்பூர் விவாகரம் பற்றி ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி புதிய விமர்சனத் தாக்குதல் தொடுத்துள்ளார்.
மணிப்பூரில் இரு குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பயங்கர கலவரம் நடந்து வருகிறது. தொடர்ந்து நீடித்து வரும் இந்த வன்முறை சம்பவங்களால் 150-க்கும் மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டு உள்ளனர்.இந்த கலவரம் பல்வேறு வெளிநாடுகளின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இந்த கலவரத்தை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது.ஆனால் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் மணிப்பூர் கலவரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'மணிப்பூர் பற்றி எரிகிறது. இந்தியாவின் இந்த உள்நாட்டு விவகாரத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் விவாதிக்கிறது. ஆனாலும் பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை' என சாடியுள்ளார்.'இதற்கிடையே, பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்க அவருக்கு ரபேல் விமானங்கள் டிக்கெட் பெற்றுக்கொடுத்துள்ளன' எனவும் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.
மணிப்பூர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், பிரபல அமெரிக்க பொருளாதார பேராசிரியர் ரிச்சர்ட் நெல்சனின் கட்டுரையை ஒப்பிட்டு மத்திய அரசை குறை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், 'நாம் நிலவுக்குச் செல்லலாம், ஆனால் நம் மக்கள் வீட்டில் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியவில்லை அல்லது விரும்பவில்லை' என மறைமுகமாக சாடியுள்ளார்.