ஏ முதல் இசட் வரை ஊழல்... காங்கிரசை சாடிய தெலுங்கானா மந்திரி
காங்கிரஸ் கட்சி ஏ முதல் இசட் வரை ஊழல் செய்துள்ளது என தெலுங்கானா தொழில் துறை மந்திரி கே.டி. ராமராவ் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.;
ஐதராபாத்,
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகன் மற்றும் தெலுங்கானாவின் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொழில் துறை மந்திரியான கே.டி. ராமராவ், தெலுங்கானா பவனில் பொதுமக்கள் முன் உரையாற்றும்போது, ராகுல் காந்தி நேற்று பேசும்போது பா.ஜ.க.வின் பி-அணி நாங்கள் என கூறினார்.
ஆனால், நாங்கள் பா.ஜ.க.வின் பி-அணி அல்ல. நீங்களே நாட்டின் சி-அணியாக இருக்கிறீர்கள். சி-அணி என்றால் ஷோர் அணி (திருட்டு அணி) என்று பொருள். நீங்கள் ஏ முதல் இசட் வரை ஊழல் செய்திருக்கிறீர்கள்.
ஏ என்றால் ஆதர்ஷ் ஊழல், பி என்றால் போபர்ஸ் ஊழல், சி என்றால் காமன்வெல்த் ஊழல். இப்படி தொடர்ந்து நாங்கள் கூறினால், இசட் வரை அது செல்லும் என்று அவர் பேசியுள்ளார்.
தொடர்ந்து அவர், காங்கிரஸ் கட்சி நாட்டை கொள்ளையடித்து உள்ளது. வானத்தில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தம் முதல், பூமிக்கடியில், நிலக்கரி வரை அவர்கள் எதனையும் விட்டு வைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.