'தஹி ஹண்டி'யை சாகச விளையாட்டாக கருதுவது எளிதானது அல்ல - அஜித் பவார்

தஹி ஹண்டியை சாகச விளையாட்டாக கருதுவது எளிதானது அல்ல என தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-16 15:59 GMT

மும்பை,

மராட்டிய தலைநகர் மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடைபெறும் தஹி ஹண்டி என அழைக்கப்படும் தயிர் பானை உடைக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக மும்பை, தானே மற்றும் புனே நகரங்களில் சிறப்பாக நடைபெறும்.

இதில் பங்கேற்கும் கோவிந்தாக்கள் வான் உயரத்திற்கு மனித பிரமிடு அமைத்து அந்தரத்தில் தொங்கவிடப்பட்டுள்ள தயிர் பானையை உடைத்து அசத்துவார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம், தஹி ஹண்டியை சாகச விளையாட்டு பட்டியலில் சேர்க்க முடிவு செய்து உள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சட்டசபையில் தெரிவித்தார்.

இந்த நிலையில், தஹி ஹண்டியை சாகச விளையாட்டாக கருதுவது எளிதானது அல்ல என தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "தஹி ஹண்டியை ஒரு சாகச விளையாட்டாகக் கருதுவது எளிதான செயல் அல்ல. இதற்கான தரவுகளை சேகரிக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. போட்டியாளர்களில் யாருக்கு பரிசு அளிக்க வேண்டும் என்பதைக் கண்டறிந்து புரிந்துகொள்வதும் கடினமாக இருக்கும்." என அவர் தெரிவித்தார்.

36-வது தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற புனே மாவட்ட வீரர்களை பாராட்டுவதற்காக புனே நகரத்திற்கு வந்த அஜித் பவார் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்