5-வது முறையாக கூட்டணி மாற்றம்: நிதிஷ்குமாரின் அரசியல் வரலாறு
நிதிஷ்குமார் நம்பிக்கைக்குரிய அரசியல்வாதியா என்பது மில்லியன் டாலர் கேள்வியே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.;
பாட்னா,
பீகாரின் நீண்ட கால முதல்-மந்திரி என்கிற பெருமைக்குரியவர் நிதிஷ்குமார். அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒருமுறை கூட தனிப்பெரும்பான்மை பெறாதபோதும் அவர் முதல்-மந்திரி பதவியை தக்கவைக்க தவறியதில்லை. இதற்காக அவர் அடித்த அரசியல் 'பல்டி' ஏராளம்.
அடுத்த வாய்ப்பை கையில் எப்போதும் வைத்திருக்கும் நிதிஷ்குமார் நம்பிக்கைக்குரிய அரசியல்வாதியா என்பது மில்லியன் டாலர் கேள்வியே என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். கூட்டணிவிட்டு கூட்டணி தாவும் நிதிஷ்குமாரின் அரசியல் வரலாற்றை சற்றே திரும்பி பார்ப்போம். தற்போது என்.ஐ.டி. என்று அழைக்கப்படும் பீகார் பொறியியல் கல்லூரியில் படிக்கும்போதே மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட நிதிஷ்குமார், பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பொறுப்புகளை வகித்தார்.
1985-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் அவர் முதல் தேர்தல் வெற்றியை கண்டார். அந்த தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றபோதிலும், நிதிஷ், லோக்தளம் கட்சியின் சார்பில் ஹர்நாட் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ. ஆனார். 5 ஆண்டுகளுக்கு பிறகு, பார்ஹ் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அடுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஜார்ஜ் பெர்னாண்டசுடன் இணைந்து சமதா கட்சியை தொடங்கினார் நிதிஷ். இதுதான் அவரின் முதல் அரசியல் அதிரடி.
2000-ம் ஆண்டில் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட நிதிஷ், முதல் முறையாக பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.பின்னர் 2003-ம் ஆண்டு ஜனதா தளம் கட்சியுடன் சமதா கட்சியை இணைத்து ஐக்கிய ஜனதா தளத்தை உருவாக்கி, அதன் தலைவரானார். 2005 சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜனதா கூட்டணி வெற்றிபெற, மீண்டும் பீகாரின் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜனதா கூட்டணியில் இருந்த நிதிஷ்குமார் 2013-ம் ஆண்டு அதில் இருந்து விலகினார்.அதன் பின்னர் 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தோல்வியடைந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் 2015 சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளம்மற்றும் காங்கிரசுடன் இணைந்து மெகா கூட்டணியை அமைத்து பா.ஜனதாவை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் மீண்டும் பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.ஆனால் இந்த மெகா கூட்டணி 2 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2017-ல் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் மீது ஊழல் புகார் எழுந்த நிலையில், அவரை ராஜினாமா செய்யுமாறு கூறினார் நிதிஷ்.தேஜஸ்வி மறுக்கவே கூட்டணியில் விரிசல் உருவானது. தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ், அடுத்த சில மணி நேரத்தில் பா.ஜனதாவுடன் இணைந்து மீண்டும் பீகார் முதல்-மந்திரி ஆனார்.
2020 சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதன் மூலம் நிதிஷ்குமார் முதல்-மந்திரி பதவியை தக்கவைத்துக்கொண்டார்.பின்னர் மீண்டும் பா.ஜனதா மீது நிதிஷ்குமார் வெறுப்படைந்தார். 2022-ல் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணியில் இணைந்தார். இதன் மூலம் மீண்டும் முதல்-மந்திரி ஆனார். இந்த சூழலில்தான் 5-வது முறையாக கூட்டணி மாறி தற்போது மீண்டும் பா.ஜனதாவுடன் நிதிஷ்குமார் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.