சந்திரயான்-3 திட்டம்; இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி

சந்திரயான்-3 விண்கலத்தினை இஸ்ரோவில் இருந்து 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளது.

Update: 2023-07-18 10:34 GMT

பெங்களூரு,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எனப்படும் இஸ்ரோ டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், சந்திரயான்-3 திட்டம் அட்டவணைப்படி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கர்நாடகாவின் பெங்களூரு நகரில், இஸ்ரோவில் இருந்து சந்திரயான்-3 விண்கலத்தினை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வெற்றி அடைந்து உள்ளது.

இதேபோன்ற, பூமிக்கு அருகே அடுத்த சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணி வருகிற 20-ந்தேதி பிற்பகல் 2 மணியில் இருந்து 3 மணிக்குள் நடைபெறும் என தெரிவித்து உள்ளது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ந்தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது. ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோமீட்டர் தொலைவை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தினை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

விண்கலத்தின் நிலை இயல்பாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. விண்கலம் அப்போது 41,762 கி.மீ. x 173 கி.மீ. சுற்றுப்பாதையில் உள்ளது என பதிவிட்டது.

இதனை தொடர்ந்து, 2-வது சுற்றுப்பாதைக்கு விண்கலம் உயர்த்தும் பணி நேற்று நடந்தது. இதன்படி, விண்கலம் 41,603 கி.மீ. x 226 கி.மீ. உயரத்தில் இருந்தது. இதனை தொடர்ந்து, 3-வது சுற்றுப்பாதைக்கு விண்கலம் உயர்த்தும் பணி இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்கு இடையே நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்