நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்

நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறியது. இது 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு நடத்துகிறது.

Update: 2023-08-23 18:56 GMT

நேற்று மாலை 6.04 மணியளவில் நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. நிலவு ஆய்வில் இந்தியா வரலாறு படைத்த தருணமாக அது மாறியது.

Live Updates
2023-08-24 04:06 GMT

சந்திரயான் 3 லேண்டரில் இருந்து நிலவில் இறங்கி நகரத் தொடங்கியது ரோவர். நிலவில் நடைபயணத்தை இந்தியா தொடங்கியது என இஸ்ரோ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2023-08-24 03:20 GMT

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் 3-ன் ரோவர் ஆய்வு பணிகளை தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் மேற்பரப்பில் இந்தியா தனது ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ பெருமிதம் தெரிவித்துள்ளது.

அடுத்த 14 நாள்கள் நிலவின் தென் துருவத்தில் உள்ள வெப்பநிலை, மண்ணின் தன்மை, நில அதிர்வுகளுக்கான வாய்ப்புகள் குறித்து ரோவர் ஆய்வு செய்யவுள்ளது.

முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் ஆய்வை மேற்கொண்டுள்ள இஸ்ரோ, உலக நாடுகள் அறியாத பல ரகசியங்களை வரும் நாள்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்பதால் ஆய்வு முடிவுகளை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

2023-08-24 00:31 GMT

வரலாற்றை மாற்றி எழுதிய இந்தியா..! அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்

நிலவில் தரையிறங்கிய ‘லேண்டரில்’ இருந்து அடுத்த 2 மணிநேரத்தில் அதற்கு உள்ளே இருந்த ரோவர் சாய்வுபலகை மூலம் வெளியே வந்து ஆய்வுப்பணியை தொடங்கியது.

இதில் ஆய்வுப்பணிக்குத் தேவையான மின்சாரத்தை அளிப்பதற்காக சூரிய சக்தி தகடுகள் விரிந்து, ஆன்டெனா, கேமராக்கள் ஆகியவை செயல்பட தொடங்கின. ரோவர் கருவி நிலவின் தரைப் பகுதியில் குறிப்பிட்ட தூரத்துக்கு ஊர்ந்து சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். அது தொடர்பான புகைப்படங்களையும் உடனுக்குடன் பூமிக்கு அனுப்பும்.

இது தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதுடன், அங்குள்ள மண்ணையும் ஆய்வு செய்யும். பூமியை பொறுத்தவரை, ஒரு நாள் என்பது 12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு என்பதாகும். ஆனால், நிலவில் ஒரு நாள் என்பது பூமியின் 28 நாளை குறிக்கும். அதாவது, தொடர்ந்து 14 நாட்கள் பகல், அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும்.

அதை கருத்தில் கொண்டுதான், பகல் தொடங்கும் முதல் நாளில் லேண்டர் கருவியை நாம் தரையிறக்குகிறோம். அடுத்த 14 நாட்கள் சூரிய வெப்பத்தை வாங்கிக் கொண்டு, லேண்டர் கருவி செயல்படும். ரோவர் கருவியும் இடைவிடாமல் உற்சாகமாக தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ளும். அனைத்து ஆய்வுகளையும், நிலவில் பகல் பொழுதான 14 நாட்களுக்குள் முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.

சந்திரயான்-4 திட்டம் அடுத்த 14 நாட்கள் இரவாக இருக்கும் என்பதால், லேண்டர் கருவிக்கு சூரிய ஒளி கிடைக்காது. அதனால், அது செயல் இழந்து போகும். ரோவர் கருவியாலும் இருட்டில் எதுவும் செய்ய முடியாது. எனவே, மொத்த ஆய்வுப் பணியும் 14 நாட்களுக்குள் முடிந்துவிடும்.

அடுத்து, நிலவுக்கு சந்திரயான்-4 அனுப்பும் பணியை இஸ்ரோ மேற்கொள்ள இருக்கிறது. சந்திரயான்-4 மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில் அனுப்பப்படும். அதில், அனுப்பப்படும் கருவி மூலம் நிலவின் தரைப் பகுதியில் உள்ள கனிம வளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, ஆராய்ச்சிக்காக பூமிக்கு கொண்டுவரப்படும்.

2023-08-24 00:05 GMT

லேண்டர் தரையிறங்கிய 7 கட்ட ‘திக்திக்‌’ நிமிடங்கள்

முதல் கட்டம்

லேண்டர் நிலவுக்கு நெருக்கமாக 25 கி.மீ. தொலைவிலும் தூரத்தில் 134 கி.மீ. தொலைவிலும் இயங்கி வந்த நிலையில், நிலவின் தென் துருவ பகுதியை 25 முதல் 30 கி.மீ. தொலைவில் நெருங்கும்போது நிலாவின் தென் துருவத்தில் மென்மையாகத் தரையிறங்கும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பணி மாலை 5:40 மணிக்கு நடந்தது.

அதன்படி லேண்டரில் பொருத்தப்பட்டிருந்த சிறிய ராக்கெட்டுகளை இயக்கி விண்கலத்தின் மேல் பகுதியில் தள்ளுவிசை கொடுக்கப்பட்டது. இந்த தள்ளுவிசை காரணமாக வேகம் படிப்படியாக குறைந்து நிலாவிலிருந்து 7.4 கி.மீ. தூரத்திற்கு விண்கலத்தின் தூரம் குறைக்கப்பட்டது.

குறிப்பாக 25 கி.மீ. தொலைவில் நிலவைச் சுற்றி வரும்போது சந்திரயான்-3 ன் வேகம் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. ஆக இருந்த நிலையில் இந்தத் தள்ளுவிசை காரணமாக நிலவிற்கு அருகாமையில் 7.4 கி.மீ தூரத்திற்கு லேண்டரை இயக்கவைக்கும்போது அதன் வேகம் மணிக்கு வெறும் 1,200 கி.மீ. என்ற அளவுக்கு குறைக்கப்பட்டது. இந்த மொத்த நிகழ்வும் 10 நிமிடங்களில் நடந்து முடிந்தது.

ஆக தரையிறங்குவதற்கான அந்த 15 நிமிடங்களில் 10 நிமிடங்கள் முடிந்தது. அடுத்த 5 நிமிடங்களில் குறித்த நேரத்தில் தரையிறங்கும் முயற்சிகள் நடந்தன.

2-வது கட்டம்

முடிவு செய்யப்பட்ட இடத்தில் தரையிறங்குவதற்கான பாதையில் லேண்டர் சரியாகச் செல்கிறதா அல்லது பாதையைச் சிறிதளவு மாற்றி, சரிசெய்ய வேண்டுமா? என்ற முடிவை 2-வது கட்டத்தில் எடுக்கப்பட்டது. அதன்படி 2-வது கட்டத்தில் 7.4 கி.மீ. உயரத்தில் இருந்த விண்கலத்தை படிப்படியாகக் 6.8 கி.மீ. உயரத்திற்கு நிலவை நோக்கி கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் லேண்டர் கால்களை தரையிறங்க வசதியாக கீழ்நோக்கித் திருப்ப பக்கவாட்டில் அமைக்கப்பட்ட கால்களை சுமார் 50 டிகிரி அளவுக்குத் திருப்பும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குறிப்பிட்ட 2-வது கட்டத்தில் தான் விண்கலத்தின் செயற்கை நுண்ணறிவு கருவி அதன் பாதையை படம் பிடித்துக் கொண்டே சென்றது. அது எடுக்கும் படங்களை, அதில் பதிவேற்றி வைத்துள்ள படங்களோடு ஒப்பிட்டு, சரியான பாதையை கண்டறிந்தது.

3-வது கட்டம்

அந்த படங்களை ஒப்பிட்டு விண்கலத்தின் வழித்தடப் பாதையை முடிவு செய்து பாதுகாப்பாக செல்ல அந்த செயற்கை நுண்ணறிவு கணினி விண்கலத்தை இயக்கியது. தொடர்ந்து நிலாவின் மேற்பரப்பில் இருந்து 800 மீட்டர் உயரத்திற்கு விண்கலம் இருக்கும் வகையில் அதைக் கீழே படிப்படியாக இறக்கியது.

பக்கவாட்டில் 50 டிகிரிக்கு திருப்பப்பட்ட லேண்டர் கால்களை நேராக நிலவை நோக்கி இறங்கும் வகையில் இயக்கப்பட்டு மணிக்கு 1,200 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருந்த விண்கலத்தை நிலவுக்கு அருகில் 800 மீட்டர் உயரத்தை அடையும்போது வேகத்தை பூஜ்ஜியம் ஆக்கும் வகையில் பிரேக் பயன்படுத்தப்பட்டது.

4-வது கட்டம்

விண்கலம் அடி மேல் அடி வைத்து 800 மீட்டர் உயரத்தில் இருந்து 150 மீட்டர் உயரத்திற்கு வந்து சேர்ந்தது.

இந்தக் கட்டத்தில் விண்கலத்தின் ராக்கெட் விசை முழுமையாக குறைக்கப்பட்டு விண்கலம் 150 மீட்டர் உயரத்திற்கு வந்தது. தொடர்ந்து விண்கலம் குறிப்பிட்ட இந்த உயரத்திற்கு வந்ததும் 22 நொடிகளுக்கு அந்தரத்தில் அப்படியே மிதந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் விண்கலத்தில் இருக்கும் ‘இடர் உணர் ஆபத்து தவிர் கேமராக்கள்' வேலை செய்யத் தொடங்கியது. தரையிறங்கிய விண்கலத்தின் 4-கால்களில் ஒன்று பாறை மேல் பட்டாலோ, குழிக்குள் சென்றாலோ விண்கலம் சாய்ந்துவிடும். சரிவில் தரையிறங்கினால் கவிழ்ந்து தலைகுப்புற விழுந்துவிடக்கூடும். இத்தகைய இடர்கள் இல்லாத இடத்தைக் கண்டறிய இடர் உணர் ஆபத்து தவிர் கேமராக்கள் தொடர்ந்து கண்காணித்து செயற்கை நுண்ணறிவு கருவியை சரியான பாதையை நோக்கி இயக்கும் முயற்சி நடந்தது. இதனிடையே நிலா தனது ஈர்ப்புவிசையால் விண்கலத்தைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தது. அதற்கு சரிசமமாக விண்கலத்தின் கால்களில் உள்ள ராக்கெட்டுகள் மேல்நோக்கிய தள்ளுவிசையைக் கொடுத்தது. இதன் மூலம் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

5-வது கட்டம்

150 மீட்டரில் இருந்து விண்கலத்தை நிலவிற்கு நெருக்கமாக 60 மீட்டர் உயரத்திற்கு கீழே இறக்கி எந்த இடத்தில் தரையிறங்க வேண்டுமோ அந்த இடத்தில் ராக்கெட்டின் விசையை முழுமையாக குறைக்கப்பட்டது.

நிலாவினுடைய ஈர்ப்புவிசையின் கை ஓங்கி, மெல்ல மெல்ல காற்றில் மிதந்து விழும் இறகை போல விண்கலம் கீழ்நோக்கிச் சென்றது. பாதுகாப்புடன் தரையிறக்குவதற்கான இந்த நிலையில் விண்கலத்தில் பொருத்தப்பட்ட லேசர் டாப்லர் வெலாசி மீட்டர் என்ற புதிய கருவி நிலாவின் தரையை நோக்கி ஒரு லேசர் கற்றையை அனுப்பி அதன் பிரதிபலிப்பை பொறுத்து கூடுதலான வேகம் இல்லாமல் லேண்டரை பாதுகாப்பாக தரையிறங்க செயற்கை நுண்ணறிவு கணினி வேலை செய்தது.

6-வது கட்டம்

தொடர்ந்து 60 மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு விண்கலத்தை மேலும் நெருக்கமடைய செய்யப்பட்டது.

இதில் விண்கலத்தின் கீழ்பகுதியில் தரையைப் பார்த்தவாறு ஒரு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. இது தொடர்ச்சியாக புகைப்படங்களை எடுத்தவாறு இயக்கப்பட்டது. அதன்படி நிலவின் தரை பரப்பு எவ்வாறாக இருக்கிறது? என்பது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு

அதிக வேகத்தில் விண்கலம் கீழே இறங்காமல் மென்மையாக தரையிறங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

7-வது கட்டம்

தொடர்ந்து இந்த கட்டத்தில் விண்கலத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வகையில் நிலவின் தரைப்பரப்பில் இருந்து வெறும் 10 மீட்டர் உயரத்தில் இருந்து விண்கலம் நிலவில் மெதுவாக பாதுகாப்பாக தரையிறங்கும் அந்த தருணத்தில் நிலவின் மண் தூசி உள்ளிட்ட புழுதி படலங்கள் வேகமாக எழுந்து விண்கலத்தை பாதிக்கும் என்பதால், விண்கலத்தின் உள்ள ராக்கெட் முழுவதுமாக ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. நிலவின் ஈர்ப்பு விசையை பொறுத்து தரையிறக்கப்பட்டது. அப்போது நொடிக்கு 2 மீட்டர் என்ற வேகத்தில் விழ வைக்கவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால் தவறுதலாக நொடிக்கு 3 மீட்டர் என்ற வேகத்தில் விழுந்தாலும் கூட அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு தரையிறங்கி கலனின் கால்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

விண்கலத்தின் “திக்... திக்...” நிமிடங்கள்

முதல் கட்டம் முடிந்த பிறகு, 2-வது கட்டத்தில் 800 மீட்டர் உயரத்தில் இருந்த விண்கலம் 7-வது கட்டத்திற்கு அதாவது வெறும் 10 மீட்டர் உயரத்திற்கு வந்து சேர வெறும் 4:30 நிமிடங்களே ஆனது. இந்த நேரத்தைத்தான் விண்கலத்தின் “திக்... திக்... நிமிடங்களாக” விஞ்ஞானிகள் கருதினர். தொடர்ந்து இறுதி கட்டமாக லேண்டர் பாதுகாப்பாக நிலவில் தரையிறங்கிய பின் நிலவின் மேற்பரப்பில் உள்ள தூசுக்கள் அடங்கும் வரை காத்திருந்தது. லேண்டர் அதன் பின்னர் ரோவரை பிடித்து மெதுவாக நிலவில் கீழிறக்கியது.

தொடர்ந்து லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை மாறி மாறி புகைப்படத்தை எடுத்துக்கொண்டபின் ரோவர் தனது சக்கர கால்கள் மூலம் நிலவு பரப்பில் ஊர்ந்து சென்று நிலவை கண்காணித்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத் தொடங்கியது.

பூமியின் 14 நாட்கள் நிலவு பரப்பின் ஒரு பகல் என்பதால் நிலவின் தென் துருவத்தில் இறங்கும் சந்திரயான் 3 விண்கலம் அடுத்த 14 நாட்கள் நிலவின் தென் துருவத்தில் பகல் பொழுது என்பதால் தனது சோலார் பேனல் உதவியுடன் லேண்டர் மற்றும் ரோவர் மூலமாக ஆராய்ச்சி மேற்கொள்ள இருக்கிறது.

2023-08-24 00:00 GMT

இந்தியாவின் ‘குண்டு பையன்’-‘பாகுபலி’

இந்தியாவின் ‘குண்டு பையன்’ மற்றும் ‘பாகுபலி ராக்கெட்’ என்ற செல்லப்பெயர்களை கொண்ட அதிக எடையை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் தற்போது எல்.வி.எம். 3 ராக்கெட் என்று அழைக்கப்படுகிறது. இந்த ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டு வெற்றிகரமாக அனைத்து செயல்களும் நடந்து முடிந்துள்ளன.

முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்டது. திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் எரிபொருள் உதவியால் விண்ணில் பாயும் ராக்கெட் 4 டன் எடையை புவிநிலைச் சுற்றுப்பாதைக்கு இது எடுத்துச் செல்லும். பூமியின் தாழ் வட்டப்பாதைக்கு 6 டன்னுக்கும் அதிகமான எடையை எடுத்துச் செல்ல முடியும்.

இப்போது ‘சந்திரயான்-3’ விண்கலத்தில் ஆர்பிட்டர் அனுப்பப்படவில்லை. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்கி உலாவும் வகையிலான விண்கலம், உந்துவிசை, லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய 3 அமைப்புகளின் கலவையில் இயக்கப்படுகிறது. அதேபோல, கடந்த முறை ஏற்பட்ட தோல்வியை பாடமாக கொண்டு லேண்டர் மற்றும் ரோவர் கலன்களில் அதிநவீன வசதிகளுடன், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்ததும் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.

2023-08-23 23:55 GMT

‘அசோக சக்கரம்’

நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து வெளியே வந்த ‘பிரக்யான் ரோவர்’ என்ற 6 சக்கர ரோபோ வாகனத்தின் சக்கரங்களில் இந்தியாவின் அசோக சக்கரமும், ‘இஸ்ரோ’வின் சின்னமும் பொறிக்கப்பட்டு இருந்தன.

இந்த ரோபோ வாகனம் நிலவின் ஒவ்வொரு பகுதியாக சுற்றி வரும்போது, இந்த 2 சின்னங்களும் நிலவின் மேற்பரப்பில் பதிக்கப்படும். இதன் மூலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடான இந்தியா, அங்கு தனது சின்னத்தையும் பொறித்து வரலாற்று சாதனை படைக்கிறது.

இதில் உள்ள ரோபோவால் நிலவின் மேற்பரப்பில் அரை கி.மீ. தொலைவுக்கு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்ல முடியும். இதன் மூலம் நிலவில் சேகரிக்கப்படும் தரவுகளை பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு வரும் நாட்களில் வழங்கும்.

2023-08-23 23:37 GMT

நிலவு பயணத்தில் சந்திரயான்கள்

விண்வெளித்துறையில் வியத்தகு சாதனைகளை படைத்துவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) லட்சிய கனவு திட்டம் நிலவை ஆய்வு செய்வதாகும். பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோ அதிக தீவிரம் காட்டுகிறது.

‘சந்திரயான்-1’

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழுநிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும்.

‘சந்திரயான்-1’-ன் ஆயுட்காலம் 2 ஆண்டுகள். ஆனால் விண்ணில் செலுத்தப்பட்ட 312 நாட்களுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாக ‘சந்திரயான்-1’-ன் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான இணைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது. மைக்ரோ ஒளிக்கற்றை மூலம் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ‘சந்திரயான்-1’ செயலிழந்த நிலையில் நிலவுக்கு மேலே 200 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 10 மாதங்களே செயல்பட்டாலும் ‘சந்திரயான்-1’ தனது திட்ட நோக்கத்தில் 95 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். அத்துடன், நிலவை நோக்கி வெற்றிகரமாக விண்கலத்தை விண்ணில் ஏவி உலக நாடுகளை புருவம் உயர்த்தி பார்க்கச் செய்தது இஸ்ரோ. நிலவில் தண்ணீர் இருப்பதையும் முதன்முதலில் கண்டுபிடித்தது ‘சந்திரயான்-1’ விண்கலம்தான்.

‘சந்திரயான்-2’

நிலவின் தென்துருவத்தில் கனிமங்கள், ரசாயன கலவை, இயற்பியல் துகள்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்ய திட்டமிட்ட இஸ்ரோ, நிலவில் சவாலான பகுதியாக பார்க்கப்படும், எந்த நாடும் ஆராய்ச்சியில் இறங்காத தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க திட்டமிடப்பட்டது. அதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை-22-ந் தேதி, ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பியது. 50 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அதே ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி அதிகாலை 1.52 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப் பாதையை அது சென்றடைந்தது. பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக கடந்த ‘சந்திரயான்-2’ விண்கலத்திலிருந்து ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஆனால் தென்துருவத்தில் ‘விக்ரம் லேண்டரின்’ மெதுவான தரையிறக்கம் சவாலாக மாறியது. ‘சந்திரயான்-2’ கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் பலமாக மோதியது. ஆனால் தற்போதும் ‘ஆர்பிட்டர்’ நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்துவருகிறது. ‘சந்திரயான்-2’ விண்வெளி பயணம், முழு வெற்றி பெறவில்லை.

‘சந்திரயான்-3’

தோல்வியில் துவண்டுவிடாமல், ‘சந்திரயான்-3’ திட்டத்தை ரூ.615 கோடியில் செயல்படுத்த 2020-ம் ஆண்டு இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கனவே ஆர்பிட்டர் நிலவைச் சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான பணிகளில் ஈடுபட்டுவந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்தன.

தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, அதிக எடையை தாங்கிச் செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த மாதம் 14-ந் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது ‘சந்திரயான்-2’-ன் இறுதி-முடிவு திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு தொடர் பணியாகும்.

2023-08-23 23:26 GMT

‘சந்திரயான்-3’ வெற்றியில் தமிழ் ‘மண்’ணுக்கும் பங்கு உண்டு


‘சந்திரயான்-3’ வெற்றியில் தமிழ் ‘மண்’ணுக்கும் பங்கு உண்டு.

விஞ்ஞானிகள்

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய ‘சந்திரயான்-3’ விண்கல ‘லேண்டர்’ வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், ‘சந்திரயான்-2’ விண்வெளிப் பயண இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு.

‘சந்திரயான்-3’ சோதனைக்கு...

இப்படி தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ‘மண்’ணுக்கும் ‘சந்திரயான்-3’ விண்கல வெற்றிப்பயணத்தில் பங்கு இருக்கிறது என்றால் அது உண்மை.

ஆம், ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் நிஜமாக தரையிறக்கப்படுவதற்கு முன்பே அது தரையிறக்கப்பட்டு சோதிக்கப்பட்டது, நமது நாமக்கல் மாவட்ட மண்ணில்தான்.

நாமக்கல் மாவட்ட மண்

காரணம், நிலவுப் பரப்பு மண்ணும், நாமக்கல் மாவட்டத்தின் சித்தம்பூண்டி, குன்னமலை கிராமப்பகுதி மண்ணும் ஏறக்குறைய ஒன்றுபோல இருப்பதுதான்.

நிலவின் தென்துருவப் பரப்பு, ஊடுருவும் எரிமலைப் பாறை வகை சார்ந்த ‘அனார்த்தோசைட்’ மண்ணைக் கொண்டிருக்கிறது. அதே போன்று நாமக்கல் மாவட்ட மண்ணும் உள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பெங்களூருவில் உள்ள ‘இஸ்ரோ’ தலைமையகத்துக்கு இந்த மண் அனுப்பப்பட்டது.

50 டன்

அந்த பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை இயக்குனரான பேராசிரியர் எஸ்.அன்பழகன் கூறுகையில், ‘நிலவு பரப்பின் மண்ணைப் போன்ற மண் தமிழ்நாட்டின் நாமக்கல் பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. எனவே ‘சந்திரயான்’ திட்ட சோதனைக்காக நாங்கள் இந்த மண்ணை அனுப்பிவைத்தோம். 3-வது முறையாக இவ்வாறு மண் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 டன் மண் அனுப்பப்பட்டது’ என்றார்.

ஆக, ‘சந்திரயான்-3’ விண்கல பயண வெற்றியில் இந்தியராக மட்டுமல்ல, தமிழராகவும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

2023-08-23 23:14 GMT

இமாலய சாதனை

‘சந்திரயான்-3’-ஐ தாங்கிய ராக்கெட் ஏவுதலின்போது எந்த பிரச்சினையும் ஏற்படாதவகையில் கட்டமைப்பு, கணினிகள், மென்பொருள் மற்றும் சென்சார்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருந்தன. அதிக எரிபொருளும் நிரப்பப்பட்டு இருந்தது.

நிலவில் தரையிறங்கும் லேண்டரின் கால்கள் பலப்படுத்தப்பட்டு இருந்தன. லேண்டர் தொடர்ந்து இயங்க அதிக ஆற்றல் உற்பத்திக்காக பெரிய சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றொரு கூடுதல் சென்சாரும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.

2023-08-23 23:12 GMT

நிலவில் மனிதன்

விண்வெளி ஆராய்ச்சியில் கொடி கட்டிப்பறக்கும் அமெரிக்கா, நிலவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பி வைத்து, நடை போட வைத்தது. அந்த அமெரிக்கா கூட நிலவின் தென்துருவப்பகுதியில் கால் பதித்தது இல்லை. எந்த விண்கலத்தையும் நிலவில் தென் துருவத்தில் இறங்க செய்ததில்லை.

ஆர்வக்கோளாறால் ரஷியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோவுக்கு முன்பாக நிலவின் தென் பகுதியில் நாம் இறங்கிவிட வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு லூனா என்ற விண்கலத்தை தயாரித்து அவசரம் அவசரமாக நிலவுக்கு அனுப்பியது. ஆனால் அதற்கு விபரீத முடிவு தான் ஏற்பட்டது. ஆனால் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த லேண்டர் நிலவில் கால் பதித்தது இந்தியாவுக்கு மட்டும் இல்லை.

இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல. பூமியில் உள்ள அனைத்து விண்வெளி பயண நாடுகளும் முன்னேறுவதற்கு உதவக்கூடியதாகும். நிலவுக்கான எங்கள் ஆய்வு மற்றும் நிலவில் மனிதனின் நிரந்தர இருப்பை ஏற்படுத்த இன்னும் சொல்வதானால் நிலவின் மனிதனை இருக்கச் செய்வதற்கும் கூட சந்திரயான்-3 ன் ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்