நிலவு பயணத்தில் சந்திரயான்கள் விண்வெளித்துறையில்... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்

நிலவு பயணத்தில் சந்திரயான்கள்

விண்வெளித்துறையில் வியத்தகு சாதனைகளை படைத்துவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) லட்சிய கனவு திட்டம் நிலவை ஆய்வு செய்வதாகும். பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்ய இஸ்ரோ அதிக தீவிரம் காட்டுகிறது.

‘சந்திரயான்-1’

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் முக்கிய நோக்கம், நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழுநிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும்.

‘சந்திரயான்-1’-ன் ஆயுட்காலம் 2 ஆண்டுகள். ஆனால் விண்ணில் செலுத்தப்பட்ட 312 நாட்களுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாக ‘சந்திரயான்-1’-ன் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான இணைப்பு திடீரென்று துண்டிக்கப்பட்டது. மைக்ரோ ஒளிக்கற்றை மூலம் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ‘சந்திரயான்-1’ செயலிழந்த நிலையில் நிலவுக்கு மேலே 200 கிலோமீட்டர் தொலைவில் சுற்றிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 10 மாதங்களே செயல்பட்டாலும் ‘சந்திரயான்-1’ தனது திட்ட நோக்கத்தில் 95 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். அத்துடன், நிலவை நோக்கி வெற்றிகரமாக விண்கலத்தை விண்ணில் ஏவி உலக நாடுகளை புருவம் உயர்த்தி பார்க்கச் செய்தது இஸ்ரோ. நிலவில் தண்ணீர் இருப்பதையும் முதன்முதலில் கண்டுபிடித்தது ‘சந்திரயான்-1’ விண்கலம்தான்.

‘சந்திரயான்-2’

நிலவின் தென்துருவத்தில் கனிமங்கள், ரசாயன கலவை, இயற்பியல் துகள்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்ய திட்டமிட்ட இஸ்ரோ, நிலவில் சவாலான பகுதியாக பார்க்கப்படும், எந்த நாடும் ஆராய்ச்சியில் இறங்காத தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க திட்டமிடப்பட்டது. அதற்காக கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை-22-ந் தேதி, ‘சந்திரயான்-2’ விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பியது. 50 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அதே ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி அதிகாலை 1.52 மணிக்கு நிலவின் சுற்றுவட்டப் பாதையை அது சென்றடைந்தது. பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக கடந்த ‘சந்திரயான்-2’ விண்கலத்திலிருந்து ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

ஆனால் தென்துருவத்தில் ‘விக்ரம் லேண்டரின்’ மெதுவான தரையிறக்கம் சவாலாக மாறியது. ‘சந்திரயான்-2’ கடைசி கட்டத்தில் நிலவில் இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் பலமாக மோதியது. ஆனால் தற்போதும் ‘ஆர்பிட்டர்’ நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்துவருகிறது. ‘சந்திரயான்-2’ விண்வெளி பயணம், முழு வெற்றி பெறவில்லை.

‘சந்திரயான்-3’

தோல்வியில் துவண்டுவிடாமல், ‘சந்திரயான்-3’ திட்டத்தை ரூ.615 கோடியில் செயல்படுத்த 2020-ம் ஆண்டு இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கனவே ஆர்பிட்டர் நிலவைச் சுற்றிவருவதால் இந்த முறை லேண்டர், ரோவர் கலன்களை மட்டும் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இதற்கான பணிகளில் ஈடுபட்டுவந்த இஸ்ரோ விஞ்ஞானிகளின் அனைத்து பரிசோதனைகளும் நிறைவடைந்தன.

தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, அதிக எடையை தாங்கிச் செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் ‘சந்திரயான்-3’ விண்கலம் கடந்த மாதம் 14-ந் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இது ‘சந்திரயான்-2’-ன் இறுதி-முடிவு திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு தொடர் பணியாகும்.

Update: 2023-08-23 23:37 GMT

Linked news