‘சந்திரயான்-3’ வெற்றியில் தமிழ் ‘மண்’ணுக்கும்... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்... 'ரோவர்' செய்யப்போகும் மெகா சம்பவம்

‘சந்திரயான்-3’ வெற்றியில் தமிழ் ‘மண்’ணுக்கும் பங்கு உண்டு


‘சந்திரயான்-3’ வெற்றியில் தமிழ் ‘மண்’ணுக்கும் பங்கு உண்டு.

விஞ்ஞானிகள்

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய ‘சந்திரயான்-3’ விண்கல ‘லேண்டர்’ வெற்றியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதியும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம், ‘சந்திரயான்-2’ விண்வெளிப் பயண இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு.

‘சந்திரயான்-3’ சோதனைக்கு...

இப்படி தமிழ் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ‘மண்’ணுக்கும் ‘சந்திரயான்-3’ விண்கல வெற்றிப்பயணத்தில் பங்கு இருக்கிறது என்றால் அது உண்மை.

ஆம், ‘சந்திரயான்-3’ விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ நிலவில் நிஜமாக தரையிறக்கப்படுவதற்கு முன்பே அது தரையிறக்கப்பட்டு சோதிக்கப்பட்டது, நமது நாமக்கல் மாவட்ட மண்ணில்தான்.

நாமக்கல் மாவட்ட மண்

காரணம், நிலவுப் பரப்பு மண்ணும், நாமக்கல் மாவட்டத்தின் சித்தம்பூண்டி, குன்னமலை கிராமப்பகுதி மண்ணும் ஏறக்குறைய ஒன்றுபோல இருப்பதுதான்.

நிலவின் தென்துருவப் பரப்பு, ஊடுருவும் எரிமலைப் பாறை வகை சார்ந்த ‘அனார்த்தோசைட்’ மண்ணைக் கொண்டிருக்கிறது. அதே போன்று நாமக்கல் மாவட்ட மண்ணும் உள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பெங்களூருவில் உள்ள ‘இஸ்ரோ’ தலைமையகத்துக்கு இந்த மண் அனுப்பப்பட்டது.

50 டன்

அந்த பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை இயக்குனரான பேராசிரியர் எஸ்.அன்பழகன் கூறுகையில், ‘நிலவு பரப்பின் மண்ணைப் போன்ற மண் தமிழ்நாட்டின் நாமக்கல் பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. எனவே ‘சந்திரயான்’ திட்ட சோதனைக்காக நாங்கள் இந்த மண்ணை அனுப்பிவைத்தோம். 3-வது முறையாக இவ்வாறு மண் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 டன் மண் அனுப்பப்பட்டது’ என்றார்.

ஆக, ‘சந்திரயான்-3’ விண்கல பயண வெற்றியில் இந்தியராக மட்டுமல்ல, தமிழராகவும் நாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

Update: 2023-08-23 23:26 GMT

Linked news