ஜனாதிபதி தேர்தல்: கட்சிகளுடன் பேச குழு அமைத்தது பாஜக

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜக குழு அமைத்துள்ளது.

Update: 2022-06-12 12:04 GMT

புதுடெல்லி,

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாஜக குழு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ராஜ்நாத்சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவார்கள் எனத்தெரிகிறது.

ஜூலை 18-ல் தேர்தல்

இந்தியாவின் 'முதல் குடிமகன்' என அழைக்கப்படும் ஜனாதிபதி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களால் ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கப்படுகிறார். இதன்படி தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ராம்நாத் கோவிந்த், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந்தேதி தேர்வு செய்யப்பட்டு, இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் 62-வது பிரிவின்படி, பதவியில் இருக்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுத்தாக வேண்டும்.

எனவே ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாள் ஆகும். 30-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு ஜூலை 2-ந்தேதி கடைசி நாள் ஆகும். ஜூலை 18-ந்தேதி தேர்தல் நடைபெறும். ஜூலை 21-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் 776 எம்.பி.க்கள், 4 ஆயிரத்து 33 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 809 பேர் வாக்களிக்க இருப்பதாகவும், இவர்களின் ஓட்டு மதிப்பின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 என்றும், தலைமை தேர்தல் கமிஷனர் தெரிவித்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுமதிப்பின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 43 ஆயிரத்து 231 ஆகும். எம்.பி.க்கள் ஓட்டுமதிப்பின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 43 ஆயிரத்து 200 ஆகும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலும், டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் உள்பட அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற கூட்ட அரங்கங்களிலும் நடைபெறும். இவ்வாறு நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.வாக்குப்பதிவு நடைபெறும் குறிப்பிட்ட அறைகளையும் தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதன்படி தமிழகத்தில் சட்டசபையின் தரைத்தளத்தில் உள்ள கமிட்டி அறையில் தேர்தல் நடைபெறும்.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நாடாளுமன்றத்துக்கு மாநிலங்களவை செயலக அதிகாரிகள் 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதைப்போல மாநிலங்களில் சட்டசபை செயலாளர் மற்றும் உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்துக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன், இணைச்செயலாளர் ஆர்.சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தலின்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத்கோவிந்தும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் மீராகுமாரும் களம் இறங்கினர். இதில் ராம்நாத் கோவிந்த் வெற்றி வாகை சூடினார்.

எனவே தற்போதைய தேர்தலிலும் இரு கட்சிகளும் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை களம் இறக்க தயாராகி வருகிறார்கள். இதில் ஆளும் பா.ஜ.க. வேட்பாளராக யாரை நிறுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மையாக உள்ள பா.ஜ.க. மாநிலங்களவையிலும் கணிசமான இடங்களை கொண்டுள்ளது. மேலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடு ஜனாதிபதி பதவியை தக்க வைத்துக்கொள்ள அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது.

எதிர்க்கட்சியான காங்கிரசும் தனது வேட்பாளரை தேர்வு செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்