ஒமைக்ரான் பிஎப்.7: 4 பேர் பாதிப்பு: சீனாவை போன்று இந்தியாவில் நிலைமை மாற வாய்ப்பில்லை -நிபுணர்கள் கருத்து

குஜராத்தில் இரு நோயாளிகளும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-12-22 05:04 GMT

புதுடெல்லி:

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான்.

இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.

இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.

இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது.ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் நேற்றுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.தற்போது 4 ஆக உயர்ந்து உள்ளது.

குஜராத்தில் இரு நோயாளிகளும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் குறுகிய அடைகாக்கும் காலத்தைக் கொண்டது, தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்றை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாட்டில் 10 கொரோனா வைரஸ் வகைகள் உள்ளன, சமீபத்தியது பிஎப்.7.

வரவிருக்கும் மாதங்களில் சீனாவில் இந்த வைரசால் லட்சகணக்கான மக்கள் இறக்க நேரிடும் என கணிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நிலைமை கவலைக்கிடமாக இருந்தாலும், இந்தியாவின் நிலைமை அவ்வாறு இல்லாமல் வேறுபட்டதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இதற்கு நிபுணர்கள் கூறும் காரணங்கள் வருமாறு:-

* பிஎப்.7 ஒமைக்ரான் ஒரு புதிய மாறுபாடு அல்ல, இது ஒமைக்ரான் மாறுபாட்டின் பிஏ.5 இன் துணைப் வரிசையாகும்.

2. இந்தியாவில் சார்ஸ்- கோவ்-2 இன் 10 வெவ்வேறு வகைகள் உள்ளன மற்றும் பி எப்.7 வைரஸ் அவற்றில் சமீபத்தியது. இந்தியாவில் தொற்றுநோயின் இரண்டாவது அலையை உருவாக்கிய வைரஸ் டெல்டா இன்னும் உள்ளது.

3. ஓமைக்ரான் துணை வகைகளில் இது வலுவான தொற்று திறன் கொண்டதாக நம்பப்படுகிறது. ஒரு பாதிக்கப்பட்ட நபர் கொரோனா தொற்றை 10 முதல் 18 நபர்களுக்கு பரப்பலாம், அதன் சராசரி இனப்பெருக்கம் 10 முதல் 18.6 வரை இருக்கும். மறுபுறம், ஒமைக்ரான் சராசரி ஆர்.ஓ 5.08 ஐக் கொண்டுள்ளது.

* மத்திய சுகாதாரத்துறை ஆய்வுக் கூட்டத்தை நடத்தி எச்சரிக்கையின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளது. மக்கள் நெரிசலான இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* மாநிலங்களில்  கண்காணிப்பு அதிகரித்துள்ளன மற்றும் சர்வதேச பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

* கடந்த மாதம் வரை சீனாவில் கடுமையான பொதுமுடக்கம் இருந்ததால், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகாததால், சீனாவின் நிலை வேறு என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

* நிபுணர்களால் மேற்கோள் காட்டப்பட்ட மற்றொரு காரணி, சீனா அதன் மக்களுக்கு வழங்கிய தடுப்பூசிகள் ஆகும். அவை அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. சீனா மக்களே அதை ஏற்று கொள்ளவில்லை.

* இந்தியாவில் ஜூலை மாதத்திலேயே பிஎப்.7 வைஅரஸ் மாறுபாடு கண்டறியப்பட்டாலும் தினசரி அல்லது வாராந்திர நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை.

* இந்தியாவில் கண்டறியபட்ட நான்கு பிஎப்.7 வைரஸ் பாதிப்புகளும் தீவிரமானவை அல்ல. நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் குணமடைந்து விட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை.

* இந்தியாவில் உள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, 3-டோஸ் பாதுகாப்பு மற்றும் மந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக இந்தியா எந்த புதிய அலையையும் காண வாய்ப்பில்லை என்பதால் பீதி அடையாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது என்று உயர் சுகாதார அதிகாரிகள் கருதுகின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி இன்று பிற்பகல் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்