பெங்களூரு சாலைகள் நரகத்திற்கு செல்லும் வழிகளாக மாறிவிட்டன; காங்கிரஸ் கடும் விமர்சனம்

பெங்களூரு சாலைகள் நரகத்திற்கு செல்லும் வழிகளாக மாறிவிட்டன என்று காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது.

Update: 2022-08-24 20:55 GMT

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

பணம் வசூலித்து கொடுக்காவிட்டால் பணி இடைநீக்கம் செய்வதாக அதிகாரிகளை தோட்டக்கலை துறை மந்திரி முனிரத்னா மிரட்டல் விடுத்துள்ளார். இந்த தகவலை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர். அடாவடியாக ஊழல் செய்யும் மந்திரி முனிரத்னாவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை எப்போது நீக்குவார். அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி வெளிப்படைத்தன்மையை எப்போது நிரூபிப்பீர்கள். முன்பு ஒப்பந்ததாரராக இருந்த முனிரத்னா இப்போது அதே ஒப்பந்ததாரர்களை ஏமாற்ற தொடங்கியுள்ளார். 40 சதவீத கமிஷனை வசூலிக்க அதிகாரிகளையே இந்த அரசு பயன்படுத்தி கொள்வதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் கைதாகி இருப்பதே சாட்சி. பெங்களூருவில் கமிஷன் 40 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதனால் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளால் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. பெங்களூரு சாலைகள் நரகத்திற்கான வழிகளாக மாறிவிட்டன. சாலை குழிகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அனைத்தும் அரசே செய்த கொலைகள் அல்லவா?. அதற்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் அல்லவா?.

இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்