காசா மருத்துவமனை மீது தாக்குதல்; சர்வதேச மனிதநேய சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்: இந்தியா வலியுறுத்தல்

காசா மருத்துவமனை மீது நடந்த தாக்குதலுக்கு உலக அளவில் எதிர்ப்பு எழுந்த நிலையில், சர்வதேச மனிதநேய சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

Update: 2023-10-19 14:41 GMT

புதுடெல்லி,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் 13-வது நாளாக இன்று தொடர்கிறது. இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, இஸ்ரேல் மீது நடந்த பயங்கர தாக்குதலுக்கு நாங்கள் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறோம்.

அனைத்து வடிவிலான பயங்கரவாதமும் எதிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என அவர் கூறினார்.

காசாவில் அல் ஆலி அரபு மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பில் 470 பேர் கொல்லப்பட்டனர் என வெளியான தகவலை தொடர்ந்து, சர்வதேச சமூகம் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இதுபற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அரிந்தம் பக்சி, காசா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், சர்வதேச மனிதநேய சட்டம் கடுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.

பாலஸ்தீன விவகாரத்தில், இரு நாடுகளுக்கும் சாதக தீர்வு ஏற்படும் வகையிலான நேரடி பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்