அசாமில் 2026-க்குள் 1,000 புதிய பாலங்கள் கட்டப்படும் - முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா

அசாமில் 2026-ம் ஆண்டுக்குள் 1,000 புதிய பாலங்கள் கட்டப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

Update: 2023-08-31 01:27 GMT

image courtesy: Himanta Biswa Sarma twitter

கவுகாத்தி,

அசாம் மாநிலம் முழுவதும் 1,000 புதிய பாலங்கள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாமில் கட்டப்பட்டுள்ள மிக நீளமானதாகக் கருதப்படும் காமாக்யா கேட் முதல் மாலிகான் வரையிலான 2.6 கிமீ நீளமுள்ள மேம்பாலத்தைத் திறந்து வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது:-

"சமீப காலங்களில் 842 சிறிய மற்றும் பெரிய பாலங்களை மாநில அரசு கட்டி முடித்துள்ளது. இன்னும் 1,000 பாலங்களுக்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த திட்டங்கள் அனைத்தும் 2026-க்குள் முடிக்கப்படும். கவுகாத்தி வடகிழக்கு நுழைவாயில் என்று மக்கள் கூறுகிறார்கள், ஆனால் நாங்கள் அதை தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாற்ற விரும்புகிறோம்.

இன்று நாங்கள் பொதுமக்களுக்காக 'நீலாச்சல் மேம்பாலத்தை' திறந்து வைக்கிறோம். இது கவுகாத்தியின் பரபரப்பான சாலைகளில் ஒன்றில் கட்டப்பட்டுள்ளது. இது பொதுப்பணித்துறைக்கு பெரிய சவாலாக இருந்தது. 420 கோடி முதலீட்டில் மாநில பொதுப்பணித்துறை இத்திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதற்கு 18,000 மெட்ரிக் டன் சிமெண்ட், 20,000 கன மெட்ரிக் டன் மணல் மற்றும் 7,500 மெட்ரிக் டன் எஃகு உள்ளிட்ட பொருட்கள் தேவைப்பட்டுள்ளது.

தற்போது பிரம்மபுத்திரா மீது மேம்பாலம், பாலங்கள் என 22 பெரிய திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் 21 பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்