சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் சுற்றுப்பாதை உயர்வு வெற்றி

சூரியனை ஆய்வு செய்ய இருக்கும் ஆதித்யா- எல்1 விண்கலம் சுற்றுப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2023-09-15 12:51 GMT

சென்னை,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட் மூலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற விண்கலம், கடந்த 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து விண்கலம் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் புள்ளி-1யை சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும்.

அதற்கு முன்னதாக ஆதித்யா எல்-1 விண்கலம் 16 நாட்கள் பூமியைச் சுற்றி வரும் போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்படுகிறது. அந்தவகையில் பூமியின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான முதல் கட்டப்பணி கடந்த 3-ந்தேதி நடந்தது. அதன்படி, சுற்றுப்பாதை பூமியில் இருந்து குறைந்த பட்சம் 245 கிலோ மீட்டரும், அதிகபட்சமாக 22 ஆயிரத்து 459 கிலோ மீட்டர் என்ற அளவில் சுற்றி வந்தது.

தொடர்ந்து அடுத்து 2-ம் கட்டமாக கடந்த 4-ந்தேதி அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் சுற்றுப்பாதை உயர்த்தும் பணி நடந்தது. தொடர்ந்து 3-வது கட்டமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி கடந்த 10-ம் தேதி நடந்தது. தொடர்ந்து 4- வது முறையாக சுற்றுவட்ட பாதை உயர்த்தும் பனி இன்று வெற்றிகரமாக நடந்தது. பெங்களூருவில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இதற்கான சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்