நியாமதியில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைப்பு

நியாமதி தாலுகாவில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

Update: 2023-09-01 18:45 GMT

தாவணகெரே-

நியாமதி தாலுகாவில் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

சிறுத்தை அட்டகாசம்

தாவணகெேர மாவட்டம் நியாமதி தாலுகா குண்டுவா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருத்து சிறுத்தை வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் சிறுத்தை கிராமத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது. இதனால் கிராமமக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேலும் கிராமமக்கள் வேலைக்கு செல்வதற்கும் அச்சமடைந்து வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் கிராமமக்கள் வனத்துறையினருக்கு சிறுத்தையை பிடிக்க கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தும், சிறுத்தை அட்டகாசத்தை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.

நாயை வேட்டையாடியது

இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறியது. அந்த சிறுத்தை குண்டுவா கிராமத்திற்குள் நுழைந்து, ஒரு நாயை அடித்து கொன்றது. பின்னர் அந்த நாயின் பாதி உடலை வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது.

இந்த காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

கூண்டு வைப்பு

அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது அதில் ஒரு சிறுத்தை நாயை வேட்டையாடி இழுத்து சென்றது தெரியவந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை வைத்தனர்.

இதனை ஏற்ற வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கிராமமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்