கர்நாடகத்தில் 25 மாவட்டங்களில் குறைவான மழை பதிவு; வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை வலுவிழந்து உள்ளது. இந்த ஆண்டு கர்நாடகத்தில் 25 மாவட்டங்களில் குறைவான மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-07-13 18:45 GMT

ெபங்களூரு:

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அதிக மழையை பெரும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக ஜூன் மாத இறுதியில் தான் பெய்ய தொடங்கியது. சில நாட்கள் கனமழை கொட்டினாலும் அதன்பிறகு போதிய மழை பெய்யவில்லை.

இதனால் பருவமழை போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை வலுவிழந்து விட்டதாகவும், கர்நாடகம் உள்பட 17 மாநிலங்களில் இயல்பை விட குறைவான மழையே பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாட்டில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்துவிட்டது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாகவே பெய்துள்ளது. நாட்டில் கர்நாடகம் உள்பட 17 மாநிலங்களில் ஜூன் மாதத்தில் பருவமழை பொய்த்துள்ளது. இந்த ஆண்டு கர்நாடகம் உள்பட தென்மாநிலங்கள் அதிக மழை பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன. தென்இந்தியாவில் 45 சதவீதம் குறைவாக பருவமழை பெய்துள்ளது. வடமேற்கு மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. வடமேற்கு மாநிலங்களில் இயல்பை விட 45 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.

தென்மாநிலங்களில் வழக்கமாக தென்ேமற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 161 மில்லி மீட்டர் மழை பதிவாகும். ஆனால் இந்த முறை 88 மில்லி மீட்டர் மழையே பதிவாகி உள்ளது. தென்மேற்கு பருவமழை காலத்தில் அதிக மழை பொழிவை பெரும் கேரளாவில் இந்த முறை இயல்பவை விட 70 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது.

கர்நாடகத்தை பொறுத்தவரை கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை இயல்பை விட 57 சதவீதம் குறைவாக மழை பொழிவு பதிவாகி உள்ளது. ஜூன் மாதத்தில் 87 தாலுகாக்களில் மழை பெய்யவில்லை. ராமநகர், மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், பல்லாரி, விஜயநகர், கொப்பல், தார்வார், சிவமொக்கா, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பருவமழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு நகர் மற்றும் புறநகர் பகுதியில் 20 சதவீதமும், தென்கர்நாடக பகுதியில் 22 சதவீதமும், வடகர்நாடகத்தில் 21 சதவீதமும், மலைநாடு மாவட்டங்களில் 64 சதவீதமும், கடலோர மாவட்டங்களில் 19 சதவீதமும் குறைவான மழை பதிவாகி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் உள்ள கே.ஆர்.எஸ்., கபினி உள்ளிட்ட முக்கிய அணைகள் இன்னும் நிரம்பாத நிலையில், பருவமழை வலுவிழந்து உள்ளதால் கடும் குடிநீர் பற்றாக்குறையை சந்திக்கும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்