பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பு; 70 வயது மனவளர்ச்சி குன்றிய மூதாட்டி பலாத்காரம்!

அந்த பெண் மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவரது குடும்பத்தினர் கண்டனர்.

Update: 2022-05-05 14:11 GMT
லக்னோ,

நாட்டின் பல பகுதிகளிலும் பெண்களுக்கு எதிராக, நெஞ்சை பதைபதைக்க வைக்கும் பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் 70 வயது  மனவளர்ச்சி குன்றிய மூதாட்டியை ஒரு காமவெறி பிடித்த நபர், வலுக்கட்டாயமாக துன்புறுத்தி அந்த பெண்ணை  பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறி உள்ளது.

தாயாக வணங்க வேண்டிய பெண்ணை இப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக உத்தரபிரதேச போலீஸ் தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டம் மிர்சாபூர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், நேற்று முன் தினம், செவ்வாய்க்கிழமை அன்று 70 வயது மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தனிமையான இடத்திற்கு ஆண் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். அங்கு அவர் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அந்த பெண் மயங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவரது குடும்பத்தினர் நேற்று கண்டனர். உடனே அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த நிலையில், குற்றவாளியின் ஆடைகளில் ரத்தக்கறை இருந்ததைக் கண்ட கிராம மக்கள், அவரைப் பிடித்து விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்துள்ளனர். அப்போது அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் உள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் தான் உ.பி.யில் 4 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை விசாரணையின்போது மீண்டும் பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரியின் கேவலமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது.

அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரத்தில் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயாக உள்ள 26 வயதுடைய இளம்பெண்ணை 20 வயது இளைஞன் ஒருவர் தன் நண்பர்கள் உதவியோடு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் அரங்கேறியது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாய், பள்ளிக்கூடங்களில் ஆசிரியரால் மாணவிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் கொடுமைகளும் நடந்த வண்ணம் உள்ளன. 

அதே போன்று, பொள்ளாச்சி பாலியல் குற்றச்சம்பவம் போன்று எண்ணற்ற கொடுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதுபோன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்மையை போற்ற வேண்டியது இந்த சமுதாயத்தின் தலையாய கடமையாகும். அதனை மறந்து நமது நாட்டின் சகோதரிகளுக்கு எதிராக இத்தகைய கொடூர வன்புணர்வு செயல்களில்  ஈடுபடுவது எந்த காலத்திலும் எத்தகைய சூழ்நிலையிலும் ஏற்கத்தக்கதல்ல என்பதை ஆண் சமுதாயம் உணர வேண்டும். 

மேலும் செய்திகள்