சர்தார் வல்லபாய் படேல் உயிரோடு இருந்திருந்தால் கோவா முன்பே விடுதலை பெற்றிருக்கும் - மோடி பேச்சு
சர்தார் வல்லபாய் படேல் இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருந்தால் கோவா முன்னரே விடுதலை பெற்றிருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
பனாஜி,
கடலோர மாநிலமான கோவாவை கடந்த 1961-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி இந்திய ராணுவம் போர்ச்சுக்கீசிய ஆட்சியின் பிடியில் இருந்து விடுவித்தது. அதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 19-ந் தேதி கோவா சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.
கோவாவின் 60-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டிய கொண்டாட்டத்துக்காக பிரதமர் மோடி நேற்று கோவா தலைநகர் பனாஜிக்கு சென்றார். அங்கு நடைபெற்ற விழாவில் கோவா சுதந்திர போரில் பங்கேற்ற வீரர்களை கவுரவித்தார். தொடர்ந்து போர் விழாவில் மோடி பேசியதாவது:-
இந்தியாவின் பெரும்பகுதியை முகலாயர்கள் ஆண்டபோது கோவா மட்டும் போர்ச்சுக்கீசியர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. நூற்றாண்டுகள் கடந்த பிறகும் கோவா தனது இந்தியத்தன்மையை மறக்கவில்லை, இந்தியாவும் கோவாவை மறக்கவில்லை.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, கோவா சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் மாநிலத்துக்கான சுதந்திர போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் கோவா சுதந்திர போராட்டம் நிற்காமல் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்தனர்.
சர்தார் வல்லபாய் படேல் இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருந்தால், 1961-ம் ஆண்டுக்கு முன்பே கோவா விடுதலை பெற்றிருக்கும். நல்லாட்சிக்கான அளவுகோல்களில் கோவா முன்வரிசையில் உள்ளது. தனிநபர் வருமானம், பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதி, ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு, வீடு வீடாக குப்பை சேகரிப்பு, உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.