உ.பி. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள பத்திரிக்கையாளரை சிகிச்சைக்காக டெல்லிக்கு கொண்டு செல்ல சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கச்சென்ற கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனை கடந்த செப்டம்பர் மாதம் உத்தரபிரதேச அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

Update: 2021-04-28 12:16 GMT
புதுடெல்லி,

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரபிரதேச மாநில ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு செய்தி நிறுவனங்கள் ஹத்ராஸ் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக செய்திகளை வெளியிட்டன.

இதற்கிடையில், ஹத்ராஸ் பாலியல் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்கும் நோக்கத்தோடு கேரளாவில் இருந்து சித்திக் கப்பன் என்ற பத்திரிக்கையாளர் உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் சென்றார். 

அக்டோபர் 5-ம் தேதி ஹத்ராஸ் செல்லும் வழியில் கப்பனை தடுத்து நிறுத்திய உத்தரபிரதேச போலீசார் அவரை கைது செய்தனர். கப்பனுடன் சேர்த்து அவருடன் வந்த மேலும் 3 பேரையும் உ.பி. போலீசார் கைது செய்தனர். 

பத்திரிக்கையாளர் கப்பனுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்பு உள்ளதாகவும், ஹத்ராஸ் விவகாரத்தை அவர் பிரச்சனைக்குரிய வகையில் கையாள முயற்சித்ததாகவும் அதனாலேயே கப்பனை கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் (யுஏபிஏ) போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கப்பன் தற்போது மதுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையில், கப்பனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் மதுரா சிறைத்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவரை படுக்கையில் கைவிலங்கால் கட்டப்பட்டு நகரக்கூட முடியாமல் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரை மருத்துவமனையில் இருந்து மாற்றி மீண்டும் சிறையில் வைத்தே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கப்பனின் மனைவி ரஹன்த் கப்பன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் கப்பனை மதுரா சிறைத்துறை மருத்துவமனையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றி சிகிச்சை அளிக்க அனுமதிக்கும்படி கேரள பத்திரிகையாளர் யூனியன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமனா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரா சிறைத்துறை மருத்துவமனையில் உள்ள பத்திரிக்கையாளர் கப்பனை டெல்லிக்கு மாற்ற உத்தரபிரதேச அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். 

ஆனால், உத்தரபிரதேச அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ளாத தலைமை நீதிபதி ரமனா பத்திரிக்கையாளர் கப்பனை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் அல்லது ஆர்.எம்.எல். மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், சிகிச்சைக்கு பின்னர் கப்பனை மீண்டும் சிறையில் அடைக்க தடையில்லை என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார். சிறையில் அடைக்கப்பட்டுவது தொடர்பாக கப்பன் நீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். 

இந்த உத்தரவையடுத்து, உத்தரபிரதேசத்தில் இருந்து கூடிய விரைவில் பத்திரிக்கையாளர் கப்பன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார்.   

மேலும் செய்திகள்