கடல்நீரில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் கருவி; சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கடல்நீரில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

Update: 2020-01-16 22:15 GMT

புதுடெல்லி, 

பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்படும் எரிபொருட்களைவிட ஹைட்ரஜன் சிறந்த, மாசு இல்லாத எரிபொருளாக கருதப்படுகிறது. காரணம் இது மற்ற எரிபொருட்கள் போல கரியமில வாயுவை (கார்பன்டை ஆக்சைடை) வெளியிடாது. எனவே ஹைட்ரஜன்தான் எதிர்கால எரிசக்திக்கான ஆதாரமாக இருக்கும் என கருதப்படுகிறது.

இதனால் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் திஜூ தாமஸ் உதவியுடன் ஆராய்ச்சி மாணவர்கள் கடல்நீரில் இருந்து ஹைட்ரஜன் தயாரிக்கும் நவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி வேதியியல் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் அப்துல் மாலிக், நிலையான வேதியியல் மற்றும் பொறியியல் என்ற பத்திரிகையில் கூறியிருப்பதாவது:–

உலகளவில் காற்று மாசு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களை கடல்நீர் மூலம் (ஹைட்ரஜன் சக்தியால்) ஓட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டோம். அதேபோல உலக எரிசக்தி துறைக்கு ஒரு தீர்வுகாண வேண்டும். அந்த வகையில்தான் இப்போது கடல்நீரில் இருந்து ஹைட்ரஜன் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளோம்.

ஹைட்ரஜன் தேவைப்படும் இடத்தில் தயாரிக்கக் கூடியது என்பதால் அதனை சேமிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதேபோல அது எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பதால் வெடிக்கும் ஆபத்தும் உள்ளது. எனவே ஹைட்ரஜனை வேறு இடங்களுக்கு கொண்டுசெல்வதும் தவிர்க்கப்படுகிறது.

நாங்கள் ஹைட்ரஜனை சேமித்துவைப்பது மற்றும் கொண்டுசெல்வதற்கான சவாலையும் சந்திக்கும் அளவில் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளோம். ஆரம்பநிலையில் உள்ள திடப்பொருளாக சுலபமாக வேறு இடங்களுக்கு கொண்டுசெல்லலாம். ஹைட்ரஜனை வெப்பம், மின்சாரம், சூரிய ஒளி ஆகியவை இன்றி குறைந்த செலவில் தயாரிக்கலாம். ஆரம்பநிலையில் உள்ள திடப்பொருள் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காது.

வர்த்தகரீதியிலோ, மோட்டார் வாகனங்கள், விமானங்கள் போன்றவற்றுக்கோ எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ஹைட்ரஜனை உற்பத்தி செய்யலாம். ஹைட்ரஜன் எதிர்கால எரிபொருள் என்றாலும், நாங்கள் அதனை இப்போதே கொண்டுவர விரும்புகிறோம்.

எங்கள் கண்டுபிடிப்பு இஸ்ரோவின் ராக்கெட்டுகளிலோ அல்லது ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஏவுகணைகளிலோ பயன்படுத்தும் நாளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். வாகனங்களுக்கு பயன்படுத்தும் அளவில் இந்த கருவியை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளோம்.

இந்த கருவியில் எந்த தண்ணீரில் இருந்தும் ஹைட்ரஜனை தயாரிக்கலாம். உலகின் மூன்றில் இரண்டு பங்கு கடல் இருப்பதால் அதனை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தினோம். இந்த கருவியை பயன்படுத்துவதும் மிகவும் எளிது. ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.

காபி தயாரிக்கும் கருவியைபோல இதனை வடிவமைக்க இருக்கிறோம். இந்த கருவி ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு பகுதிகளாக இருக்கும். மேல் பகுதியில் கடல்நீரையோ, குழாய் தண்ணீரையோ விடவேண்டும். கீழே உள்ள பகுதியில் இருக்கும் கருவி அந்த தண்ணீரை பிரித்து ஹைட்ரஜனை தயாரிக்கும். கீழே உள்ள பகுதியில் இருக்கும் குழாய் மூலம் ஹைட்ரஜன் வெளியேறும். அதனை ஒரு என்ஜினில் இணைத்துவிட்டால் வாகனங்கள் இயங்கும் அல்லது மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

மேல் பகுதியில் தண்ணீர் சேர்ப்பதை கட்டுப்படுத்துவதன் மூலம் ஹைட்ரஜன் உற்பத்தியையும் கட்டுப்படுத்த முடியும். இதற்கான தொழில்நுட்ப விவரங்கள் காப்புரிமை பெறப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

வர்த்தகரீதியில் ஹைட்ரஜன் தயாரிக்க ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பமும், 25 புள்ளிகள் அழுத்தமும் தேவைப்படும். ஆனால் இந்த புதிய கருவி அறையின் வெப்பத்திலும், ஒரு புள்ளி அழுத்தத்திலும் இயங்கக்கூடியது. ஹைட்ரஜன் விலையை பொறுத்தவரை இப்போது கிடைக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனாலும் இது தேவைக்கு ஏற்ப மாறுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்