ஜம்மு காஷ்மீர் தேர்தல்: விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.4,000 வழங்கப்படும் - காங்கிரஸ் வாக்குறுதி

ஜம்மு காஷ்மீரில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது.;

Update:2024-09-16 21:43 IST

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இந்திய அரசியல் களத்தில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

முதல்கட்ட ஓட்டுப்பதிவு வரும் 18ம் தேதியும், 2ம் கட்ட ஓட்டுப்பதிவு செப்டம்பர் 25ம் தேதி நடக்கிறது. அக்டோபர் 1ம் தேதி 3ம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. 3 கட்ட ஓட்டுப்பதிவுக்கு பின்னர் அக்டோபர் 8ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ள 24 தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவடைந்துள்ளது. முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் 24 தொகுதிகளில் 3 பெண்கள் உள்பட 219 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். பிரசாரம் நிறைவு பெற்றுள்ளதால் ஓட்டுப்பதிவு மற்றும் பாதுகாப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியாக சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 4,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சொந்தமாக நிலம் இல்லாத விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ. 4,000 வழங்கப்படும் என்று கூறிய நிலையில், அதன்பின் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து அளித்துள்ள விளக்கத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 4,000 வழங்கப்படும். மேலும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதும் 100 நாள்களுக்குள் சிறுபான்மையினருக்கான ஆணையம் உருவாக்கப்படும்.

ஆப்பிள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.72 நிர்ணயிக்கப்படும். அனைத்து வகையான பயிர்களுக்கும் 100 சதவிகித காப்பீடு வழங்கப்படும். 30 நாட்களுக்குள் காலியாக உள்ள ஒரு லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கு உதவித்தொகையாக மாதம் ரூ.3,500 வழங்கப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்