பிரதமர் மோடிக்காக மணிப்பூர் காத்திருக்கிறது- காங்கிரஸ் தாக்கு

உலகம் முழுவதும் செல்வதற்கு விருப்பமும், ஆற்றலும் இருக்கும் பிரதமர் மோடிக்காக மணிப்பூர் காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி மீண்டும் சாடியுள்ளது.;

Update:2025-01-15 01:33 IST

புதுடெல்லி,

மணிப்பூரில் 1½ ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கலவரத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இதுவரை செல்லாததற்காக பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் விவகாரத்தை வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-பிரதமர் மோடியின் பயணத்துக்காக மணிப்பூர் இன்னும் காத்துக்கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதற்கு அவருக்கு நேரமும், ஆர்வமும், சக்தியும் இருக்கிறது.

ஆனால் மணிப்பூரில் துயரத்தில் வாடும் மக்களை சந்திப்பது அவசியமானது என அவர் நினைக்கவில்லை. அங்கு செல்வதற்கு அவருக்கு நேரமும் இல்லை. மணிப்பூர் முதல்-மந்திரி உள்பட தனது சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி எந்த அரசியல் தலைவர்களையும் சந்திக்க தொடர்ந்து மறுத்து வருகிறார்.மணிப்பூரின் துயரம் 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி முதல் தணியாமல் தொடர்கிறது.

இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்